அதிரடி அரசியலில் ஜோதிமணி!

By கரு.முத்து

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கடந்த சில காலமாக, அனுதினமும் ஏதாவது ஒரு அமைச்சரைச் சந்தித்து தன்னுடைய தொகுதிக்கான குறைகளை நிவர்த்தி செய்யக் கோருவது, தொகுதிக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றித் தருமாறு கேட்பது என்று ஏதாவது ஒருவிதத்தில் தன்னை முன்னிலைப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இது தவிர, அரசியல் சர்ச்சைகள் தொடர்பாக தனது அதிரடி கருத்தைப் பதிவுசெய்தும் கவனம் ஈர்த்துவருகிறார். இப்படி அவர் பரபரப்பாக இயங்குவதன் பின்னணி, அவருக்குள் இருக்கும் ‘மாநில தலைவர் கனவு’ தான் என காங்கிரஸ் வட்டாரத்தில் விவாதிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

அதிரடிக் கருத்துகள்

பாஜக மாநிலப் பொதுச்செயலராக இருந்த கே.டி. ராகவன் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தபோது, அவர் மீதும், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் மற்ற பாஜகவினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவைச் சந்தித்து மனு அளித்தார் ஜோதிமணி. அந்தப் பிரச்சினை தொடர்பாக ஊடக விவாதங்களில் கலந்துகொண்டும் பேசினார். சமூக வலைதளங்களிலும் கடுமையான கருத்துகளைப் பதிவுசெய்தார்.

கே.டி ராகவனை ஆதரிப்பதுபோல சில வார்த்தைகளை நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் சொல்லியிருப்பதைப் பிடித்துக்கொண்டு, கடந்த காலத்தில், தான் செய்த குற்றத்தை மறைக்கவே ராகவனின் பாலியல் குற்றத்தை சீமான் வெளிப்படையாக ஆதரிக்கிறாரோ என சந்தேகம் கிளப்பினார் ஜோதிமணி. ராகவன் விஷயத்தில் நடவடிக்கை எடுக்காத, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதவிவிலக வேண்டும் என்று அறிக்கை விட்டதோடு மட்டுமல்லாமல் பாஜகவைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டார்.

ஜோதிமணியின் நாடாளுமன்றச் செயல்பாடுகளும் குறிப்பிடத்தக்க வகையில் இருப்பதாகப் பாராட்டப்படுகிறது. இப்படிப் பல்வேறு வகைகளில் தன்னை முன்னிலைப்படுத்தும் வேலைகளை ஜோதிமணி செய்துவருவது, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியைக் குறிவைத்துத்தான் என்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.

அழகிரி மீது அதிருப்திக் கணைகள்

தமிழக காங்கிரஸின் தற்போதைய தலைவர் கே.எஸ். அழகிரி மீது, அவர் தலைவரான காலத்திலிருந்தே ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை காங்கிரஸார் தலைமைக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அழகிரி மீதான குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டு தலைமைக்கு அனுப்பிவைத்து, “இப்படிப்பட்டவருக்கா தலைமைப் பதவி?” என்று கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மாவட்டத் தலைவர் விஜயசுந்தரம் கேட்டார். ஆனால், அவரைக் கட்சியை விட்டே நீக்கவைத்தார் அழகிரி.

ஜோதிமணி

கீரப்பாளையத்தில் உள்ள அழகிரியின் கல்லூரிக்கான அங்கீகாரம் ரத்துசெய்யப்பட்ட விவகாரத்தின்போதே, அவர் பதவிவிலக வேண்டும் என்று நெல்லை கண்ணன் போன்றவர்கள் வலியுறுத்தினார்கள். மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் கொடுப்பதற்கு, லட்சக்கணக்கில் பணம் வாங்கினார் அழகிரி என்ற குற்றச்சாட்டும் கட்சிக்காரர்களால் சொல்லப்பட்டது. தற்போது வரை, கட்சிப் பொறுப்பாளர்கள் நியமனத்தில் பணம் பார்க்கிறார் என்று அழகிரி மீது அடுக்கடுக்காய் தலைமைக்குப் புகார்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

கட்சியில் உள்ள மற்ற கோஷ்டி தலைவர்களும் தற்போது அழகிரிக்கு ஆதரவாக இல்லை. அழகிரியை மாற்ற வேண்டுமென்று அவர்களும் தலைமையை நச்சரிக்கிறார்கள். ப.சிதம்பரத்தின் ஆதரவாளராகத் தன்னைக் காட்டிக்கொண்டு மாநிலத் தலைவர் பொறுப்புக்கு வந்த அழகிரி, இப்போது அவரையும் மதிப்பதில்லை; அவருடைய ஆதரவாளர்களுக்கும் எதையும் செய்து தரவில்லை என்கிறார்கள். இதனால், அழகிரி மீது ப.சிதம்பரமும் கார்த்தி சிதம்பரமும் கடும்கோபத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதன் விளைவாகத்தான், வெளிப்படையாகவே பல விஷயங்களில் அழகிரியுடன் மோதல் போக்கைக் கடைபிடித்து வருகிறார் கார்த்தி சிதம்பரம்.

ஒட்டுமொத்த காங்கிரஸ்காரர்களின் எதிர்ப்பையும் சம்பாதித்துக்கொண்ட அழகிரியை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாகத் தலைமை நினைக்கிறது. அதுமட்டுமில்லாமல் அழகிரி பதவிக்கு வந்து மூன்றாண்டுகள் முடியப்போகிறது. அதனால் புதிய தலைவரை நியமித்து மக்களவைத் தேர்தலுக்கு கட்சியைத் தயார் செய்ய வேண்டும் என்ற முடிவுக்குக் காங்கிரஸ் தேசியத் தலைமை வந்திருக்கிறதாம். அழகிரிக்குப் பதிலாக பழைய கோஷ்டித் தலைவர்கள் யாரையும் நியமிக்க வேண்டாம், புதிதாக ஒரு இளைஞரை நியமிக்கலாம் என்று தலைமை நினைப்பதாகச் சொல்கிறார்கள்.

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தும் ஜோதிமணி

அதற்கேற்றாற்போல, துடிப்பான இளம் தலைவராகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் வேலைகளைத் தான் ஜோதிமணி இப்போது செய்துவருகிறார். பாஜகவில் அண்ணாமலைக்குத் தலைவர் பதவி, எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி எனத் தொடர்ந்து கொங்கு மண்டலத்துக்கு முக்கியத்துவம் கிடைத்துவரும் நிலையில், அதற்கு ஈடாகக் காங்கிரஸிலும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தனக்குத் தலைமைப் பதவி கிடைக்கலாம் என்று கணக்குப்போட்டு காய் நகர்த்திவருகிறார் ஜோதிமணி.

தலைவராக இல்லாதபோதே இவ்வளவு தீவிரமாகச் செயல்படும் போது, தலைவராக்கினால் இன்னும் தீவிரமாகச் செயல்படுவார் என்று தலைமை நினைக்குமளவுக்கு தினம் உழைக்க வேண்டும் என்று முடிவுடன் செயல்பட்டு வருகிறார் ஜோதிமணி.

பரமத்தி ஒன்றிய கவுன்சிலராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய ஜோதிமணி, அப்போது உபியில் நடைபெற்ற காங்கிரஸ் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமில் கலந்துகொண்டபோதுதான் ராகுல் காந்தியைச் சந்தித்தார். அவரது சுறுசுறுப்பான செயல்பாடுகள் ராகுல் காந்தியைக் கவர, அப்போதிலிருந்து ஜோதிமணிக்குக் கட்சியில் ஏறுமுகம்தான்.

அடுத்து வந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகக் களமிறங்கி, செந்தில் பாலாஜியை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோதிமணிக்குத் தோல்வியே கிட்டியது. ஆனாலும், 2014 மக்களவைத் தேர்தலிலும் கரூர் வேட்பாளராக அவருக்கே வாய்ப்பளித்தது கட்சி. அப்போதும் தோல்விதான். அதன் பின்னர், தேசிய அளவில் வேகமாகத் தன்னை வளர்த்துக்கொண்டார். கட்சியின் மேலிடச் செல்வாக்கால், 2019 மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்று வென்று காட்டினார். இப்போது அடுத்த கட்டத்துக்குத் தன்னை நகர்த்திக்கொண்டிருக்கிறார்.

பலமான போட்டி

ஆனால், ஜோதிமணியின் கனவு அவ்வளவு எளிதில் நிறைவேறுமா என்பதும் கேள்விக்குறிதான். ‘அடுத்தவர்களுக்குப் பதவி வாங்கிக் கொடுத்ததெல்லாம் போதும், இனி நாமே தலைவராகிவிட வேண்டும்’ என்பது கார்த்தி சிதம்பரத்தின் மனவோட்டம். அதற்காகத் தந்தை மூலமாகவும், நேரடியாகவும் தலைமைப் பதவியைக் குறிவைத்து கட்சித் தலைமைக்கு மனு போட்டுக்கொண்டிருக்கிறார். இளைஞர் என்ற முறையிலும், தந்தையின் செல்வாக்காலும் தன்னையே கட்சித் தலைவராக அறிவிப்பார்கள் என்று காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் நீக்குப்போக்காகப் பேசத் தெரியாதவர், சொந்தக் கட்சிக்காரர்களையே கடுமையாக விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்திவிடக்கூடியவர் என்பதையெல்லாம் கவனிக்கும் தலைமை, அவருக்கு அந்த வாய்ப்பை அளிக்காது என்கிறார்கள்.

சட்டப்பேரவைக் கட்சித்தலைவர் பதவி தனக்குத்தான் தர வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்திய விஜயதரணியும் தலைமைக்கான போட்டியில் இருக்கிறார். ஒரு பெண்ணுக்குத்தான் வாய்ப்பு என்று பேசப்படும் நிலையில், அதைத் தனக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று டெல்லி தலைமையிடம் அவர் மன்றாடுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், அனைவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டிய பொறுப்பை அவருக்கு வழங்கினால் சரிவராது என்று தலைமை நினைக்கிறது.

ஆக, மற்ற இருவரைவிட ஜோதிமணிக்கே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். அவரது விறுவிறுப்பான செயல்பாட்டுக்கான வெகுமதியாக, விரைவில் அவர் மாநிலத் தலைவராக அறிவிக்கப்படலாம் என்பதே காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சாக இருக்கிறது. ராகுலிடம் தனக்குள்ள அபிமானம் தலைவர் பதவியையும் பெற்றுத் தந்துவிடும் என்று உறுதியாக நம்புகிறார் ஜோதிமணி.

பார்க்கலாம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE