தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, நெல்லை மண்டல நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் இன்று நடந்தது. மாநிலத் தலைவர் விக்ரமராஜா தலைமையில் நடந்த கூட்டத்துக்கு மாநில பொதுச் செயலர் கோவிந்தராஜ், மாநில பொருளாளர் சதக்கத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், தமிழகத்தில் சென்னையில் உள்ள டோல்கேட்டுகளை அகற்றியதைப் போல மதுரை உள்ளிட்ட பல்வேறு மாநகரங்களில் உள்ள டோல்கேட்டுகளை அகற்ற தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் உள்ள காலாவதியான டோல்கேட்டுகளை அகற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மணிமண்டபம் கட்ட உள்ளதை வரவேற்கிறோம். தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றாலம், ஒகேனக்கல் போன்ற நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதற்கும் அனுமதி வழங்க வேண்டும். அதேபோல கொடைக்கானல், ஊட்டி, வால்பாறை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் எந்த ஒரு தடையும் இல்லாமல் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும். தமிழக அரசு செப்டம்பர் மாதம் வரையில் சேவைக் கட்டணம் ரூ.500 இல்லாமல் வணிகர்கள் நல வாரிய உறுப்பினர்களாகச் சேரலாம் என்று அறிவித்திருக்கிறது. கரோனா காலம் என்பதால், இந்தக் கால வரம்பை டிசம்பர் 31 வரை நீட்டித்து அரசு உத்தரவிட வேண்டும் என்பது உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டம் முடிந்த பிறகு, பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மண்டல வாரியாக வணிகர்களின் குறைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிந்ததும், முதலமைச்சரை நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கைகளை அவரிடம் தெரிவித்து நிறைவேற்றக் கோருவோம். நகர்ப்பகுதியிலும், தேவையில்லாத இடங்களிலும் உள்ள சுங்கச் சாவடிகளால் பொதுமக்களைப் போலவே வணிகர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, சென்னையைப் போலவே, மதுரை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள சுங்கச்சாவடிகளையும் இதர மாநகர, நகராட்சி எல்லைக்குள் உள்ள சுங்கச்சாவடிகளையும் நீக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறோம்.
ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில், அடுத்தடுத்து சுங்கக்சாவடிக் கட்டணமும் உயர்த்தப்படுவதால் மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்று வணிகர்கள் கூறுகிறார்கள். இதுகுறித்து சென்னையில் சங்க ஆலோசனை கூட்டம் நடத்தி, போராட்டம் நடத்துவதற்கான தேதியை அறிவிப்போம். சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வந்தால்தான் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். பல்வேறு தளர்வுகளுடன் அனைத்து தொழில்களும் இயக்குவதற்கு அரசு அனுமதியளித்துள்ள நிலையில், சுற்றுலாத் தலங்களில் சில தடைகள் இருப்பது வருத்தமளிக்கிறது. குறிப்பாக, குற்றாலம், ஒகேனக்கல், வால்பாறை போன்ற அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதிக்க வேண்டும். அங்குள்ள வணிகர்கள் எந்தத் தடையும் இல்லாமல் கடைகளைத் திறக்கவும் அரசு அனுமதி தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.