பஞ்சு மீதான சந்தை நுழைவு வரி ரத்து

By ரஜினி

தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று, பஞ்சு மீதான 1 சதவீதம் சந்தை நுழைவு வரி ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேரவை விதி 110-ன்கீழ் இதற்கான அறிவிப்பை வெளியிட்ட முதல்வர், “நெசவாளர் மற்றும் தொழில் முனைவோர், சிறு, குறு தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது தமிழக அரசு. நாட்டின் துணிச் சந்தையிடுதலில் 3-ல் ஒரு பங்கை தமிழகம் செய்கிறது. தமிழகத்தில் 1,570 நூற்பாலைகள் உள்ளன. இந்த ஆலைகளுக்குத் தேவையான பஞ்சில் 95 சதவீதம் வெளி மாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இப்படி கொள்முதல் செய்யப்படும் பஞ்சுக்கு 1 சதவீதம் சந்தையில் நுழைவு வரி வசூலிப்பதால் சிறு, குறு தொழிலாளர்களுக்கு பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. நெசவாளர் மற்றும் தொழில் முனைவர்கள் இதுகுறித்து அரசிடம் கோரிக்கை வைத்து நுழைவு வரியை ரத்து செய்யக்கோரினர்.

அதன் அடிப்படையில், பஞ்சு மீதான ஒரு சதவீத சந்தை நுழைவு வரி ரத்து செய்யப்படுகிறது. இதன் மூலம் தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்கள் பயனடைவார்கள். நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே இதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்” என்று சொன்னார்.

முதல்வரின் இந்த அறிவிப்பால், நெசவாளர்களும் தொழில்முனைவோரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE