ஜெ. பல்கலைக்கழக விவகாரம் – போராட்டத்தில் இறங்கிய அதிமுக

By கரு.முத்து

கடந்த அதிமுக அரசால், ஜெயலலிதா பெயரில் அறிவிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு அதிமுக தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் அதற்கான மசோதா ஆகஸ்ட் 31-ம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டதை எதிர்த்து, அதிமுகவினர் மாநிலமெங்கும் போராட்டத்தில் இறங்கி கைதாகினர்.

அரியலூரில்..

அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் ஜெ. பல்கலைக்கழகத்தை இணைக்கும் மசோதாவை, சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். அவையிலும், அவைக்கு வெளியிலும் இம்முடிவை கடுமையாக எதிர்த்து வந்த அதிமுகவினர் அவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்த அதிமுக எம்எல்ஏக்கள், கலைவாணர் அரங்கம் எதிரே வாலாஜா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் காவல் துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

தஞ்சாவூரில்..

இத் தகவல், ஊடகங்கள் மூலம் வெளியானதும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் இறங்கினர். முதல் நபராக, முன்னாள் சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டார். அவரையும் போலிஸார் கைது செய்தனர். திருச்சியில் வடக்கு, தெற்கு மாவட்டங்கள் சார்பில் மாவட்டச் செயலர்கள் குமார், பரஞ்சோதி ஆகியோர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கரூரில் மாவட்ட செயலர் எம். ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய மண்டலத்தில் உள்ள இதர மாவட்டங்களான தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் அதிமுகவினர் மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோலவே, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு சோர்ந்துகிடந்த அதிமுகவினருக்கு ஜெ. பல்கலைக்கழக விவகாரம் சுறுசுறுப்பைக் கொடுத்துள்ளது. கோடநாடு விவகாரத்தை திமுக அரசு கையிலெடுத்திருப்பதற்கு நேரடியாக தங்கள் எதிர்ப்பைக் காட்டமுடியாமல் தவித்துவந்த அதிமுகவுக்கு, இந்த விவகாரம் கைகொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE