6 மாதத்தில் 197 ஆஞ்சியோகிராம் சிகிச்சை!

By கரு.முத்து

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இதய சிகிச்சைப் பிரிவில், 6 மாதங்களில் 197 இதய நோயாளிகளுக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டிருக்கிறது. அப்பிரிவில் ஒரேயொரு இதய சிகிச்சை மருத்துவர் மட்டுமே உள்ள நிலையில், இது சாதனையாக கருதப்படுகிறது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி கடந்த அதிமுக ஆட்சியின்போது தொடங்கப்பட்டது. தனது சொந்த மாவட்டம் என்பதால், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இங்கு ஏராளமான வசதிகளைக் கொண்டுவந்தார். கடந்த ஜனவரி மாதம், இருதய அறுவை சிகிச்சைப் பிரிவுக்காக மூன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள இருதய ரத்தக்குழாய் உள்ஊடுருவி உள்ளிட்ட நவீன கருவிகள் மற்றும் உபகரணங்கள் பொருத்தப்பட்டது. அப்போதிலிருந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் திருமதி பூவதியின் முயற்சியால், இதய நோயாளிகளுக்கு சிகிச்சை ஆரம்பமானது. எனினும் கரோனா கட்டுப்பாடுகளால், 3 மாத காலம் இப்பிரிவு தீவிரமாகச் செயல்படவில்லை.

டீன் பூவதி

தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதால், இப்பிரிவு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. இந்தக் குறைந்த காலத்தில், ஒரேயொரு மருத்துவருடன் செயல்பட்டு வந்தாலும் இதுவரையிலும் 197 பேருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை மற்ற மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை ஒப்பிட்டால் குறைவுதான் என்றாலும் அங்கெல்லாம் மருத்துவர்கள் அதிகம் இருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் மருத்துவ மாணவர்களும் ஏராளமாக இருக்கிறார்கள். அதனால், அங்கெல்லாம் அதிக எண்ணிக்கையில் சிகிச்சை அளிக்க முடியும். இருப்பினும் இங்கு, இதயநோய் பிரிவு சிறப்பு மருத்துவர் நாச்சியப்பனின் தன்னலமற்ற மருத்துவச் சேவையால் தற்போது உடனடியான, தரமான இதய சிகிச்சை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

’’முன்பெல்லாம் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் திருச்சி, தஞ்சாவூர் அல்லது மதுரைக்குத்தான் இதயநோய் சிகிச்சைபெற சென்றார்கள். இப்போது இங்கேயே தரமான சிகிச்சை கிடைக்கிறது. மாதத்திற்கு 70 முதல் 80 நோயாளிகள் மாரடைப்பு அல்லது அதன் அறிகுறிகளுடன் இங்கு வருகிறார்கள். அவர்களில் தீவிர இதயநோயாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதய நோயாளிகளின் உயிரைக் காப்பதையே முதல் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறோம். இதுவரை 197 பேருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டிருக்கிறது. 10 பேருக்கு ஸ்டன்ட் அறுவைச் சிகிச்சையும் செய்யப்பட்டிருக்கிறது” என்கிறார் மருத்துவர் நாச்சியப்பன்.

நாச்சியப்பன்

“இப்பிரிவில் ஒரே ஒரு மருத்துவர் தான் இருக்கிறார். இருந்தபோதிலும் இலக்கைவிட அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. கூடுதல் மருத்துவர்கள் இருந்தால் இன்னும் அதிக எண்ணிக்கையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்” என்கிறார் கல்லூரி முதல்வர் பூவதி.

மக்கள் சேவை மகத்தானது என்பதை உணர்ந்தும் இருக்கிறீர்கள், மற்றவர்களுக்கு உணர்த்திக் கொண்டும் இருக்கிறீர்கள்.

வாழ்த்துகள் மருத்துவர்களே!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE