சென்னை: தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின்கட்டணத்தை உயர்த்தக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: யூனிட்டுக்கு 50 காசு: தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தி 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆணை பிறப்பித்தது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 1-ம் தேதியிலிருந்து மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். ஒவ்வொரு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்துக்கான பண வீக்க விகிதம் அல்லது 6 விழுக்காடு இவற்றில் எது குறைவோ அதற்கேற்ப மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.
இதையொட்டி நடப்பாண்டின் ஏப்ரல் மாத பணவீக்க அளவான 4.38 விழுக்காடுக்கு ஏற்ப மின்கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் யூனிட்டுக்கு 50 காசுகள் வரை மின்கட்டணம் உயரும். கடந்த ஆண்டில் மின்கட்டணம் 2.18 விழுக்காடு உயர்த்தப்பட்ட நிலையில், மக்களால் அதை தாங்கிக் கொள்ள முடியாது என்று தெரிவித்து அரசே ஏற்றுக் கொள்வதாக என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: ஆனால் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ள நிலையில், நடப்பாண்டில் மட்டும் மின்கட்டண உயர்வை மக்களால் எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும்? மின்வாரியத்தின் இழப்பைக் குறைக்க மின்கட்ட ணத்தை உயர்த்துவது தீர்வல்ல.
மின்வாரியத்தில் நடக்கும் ஊழல்களைத்தான் தடுக்க வேண்டும். எனவே வீடுகள், தொழிற்சாலைகள் ஆகிய இரு தரப்புக்கும் மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தி யுள்ளார்.