அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம், அகவிலைப்படி உயர்வு, ஊதிய முரண்பாடுகளைக் களைதல் உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கப் படாதது அவர்களிடையே பெரும் மனக்குறையை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடு அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக திகழும் அரசு ஊழியர்களுக்கான உரிமைகளை வழங்குவதை தாமதப்படுத்துவது நியாயமல்ல என்று மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டில் 2003 -ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை மறுக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். பல்வேறு நிலைகளில் நிலவும் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிட்ட தற்காலிகப் பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்பன தான் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளில் முக்கியமான சிலவாகும். இந்தக் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு அரசும் இக்கோரிக்கைகள் நியாயமற்றவை என்று கூறவில்லை. அதேநேரத்தில், நிதி நெருக்கடி என்ற ஒற்றைக் காரணத்தைக் கூறி, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற மறுப்பது நியாயம் அல்ல.
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.