தனியார் துறையில் வேலை வாய்ப்பு

By கா.சு.வேலாயுதன்

மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்தி தர கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியாக ஒரு மையம் (Private Job Placement Counselling Centre) அமையவிருக்கிறது.

பட்டதாரிகள் மட்டுமின்றி பள்ளிக்கல்வி படித்தவர்கள் கூட அரசு வேலையையே நம்பியிருக்கக்கூடாது என்பதற்காக தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து தனியார் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது அரசு. அதில் முன்னோடி மாவட்டங்களில் ஒன்றாக கோவை மாவட்டம் இருந்து வருகிறது. அதன்படி மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காகவும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மாவட்ட நிர்வாகம், அவர்களின் திறன்கள் அடிப்படையில் வேலைவாய்ப்பினையும் வழங்கி வருகிறது.

பணி ஆணை வழங்கல்

அந்த வகையில் கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ‘வி ஆர் யூ வாய்ஸ்’ என்ற தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாமை நடத்தியது. அதில் தேர்வு பெற்ற 22 பேருக்கு பணி நியமண ஆணையை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி அலுவலகத்தில் 25-ம் தேதி நடந்த இந்த வேலைவாய்ப்பு முகாமில் 113 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இவர்களில் 22 பேருக்கு பணி ஆணையை வழங்கி ஆட்சியர் சமீரன் பேசுகையில்,

‘‘தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன், திறன்கள் அடிப்படையில் வேலைவாய்ப்பினையும் வழங்கி வருகிறது. அதில் ஒன்றாகவே இந்த தனியார் வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகள் வழங்க இன்னும் சில தனியார் அமைப்புகளும் முன் வந்துள்ளன. மேலும், வரும் செப்டம்பர் மாதத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் மையம் ( Private Job Placement Counselling Centre) ஒன்று தொடங்கப்பட உள்ளது. இந்த மையத்தை மாவட்ட நிர்வாகமும் ‘வி ஆர் யுவர் வாய்ஸ்’ என்ற தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம், வேலை வாய்ப்பு வேண்டி விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளின் தகுதிகள், திறன்களுக்குத் தகுந்தவாறு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்!’’ என்றார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி

இந்த வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறானளிகளுக்கான திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 21 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பில் திருமண நிதி உதவி மற்றும் தலா 8 கிராம் தங்க நாணயங்கள் இவற்றுடன் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE