தமிழ்நாட்டில் மேலும் 6 மாநகராட்சிகள் புதிதாக உருவாக்கப்படுகின்றன. தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஆக.25 அன்று நடைபெற்ற மானிய கோரிக்கையின்போது அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழகத்தில் ஏற்கெனவே சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல், ஓசூர், நாகர்கோவில், ஆவடி என மொத்தம் 15 மாநகராட்சிகள் உள்ளன.
இப்போது கூடுதலாக 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட உள்ளன. நகராட்சிகளாக இருந்த தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், கரூர், சிவகாசி ஆகியவை அதன் அருகில் உள்ள உள்ளாட்சி அமைப்புக்களைச் சேர்த்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகின்றன.
அதேபோல பள்ளபட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, பொன்னேரி, திருநின்றவூர், சோளிங்கர், இடங்கனசாலை, தாரமங்கலம், திருமுருகன்பூண்டி, கூடலூர், காரமடை, கருமத்தப்பட்டி, மதுக்கரை, வடலூர், கோட்டக்குப்பம், திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை, அதிராம்பட்டினம், மானாமதுரை, சுரண்டை, களக்காடு, திருச்செந்தூர், கொல்லன்கோடு, முசிறி, லால்குடி உள்ளிட்ட 28 பேரூராட்சிகள் அதனருகில் உள்ள ஊராட்சிகளை இணைத்து நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன.