கே.டி.ராகவன் விவகாரம்: அண்ணாமலை பதவிக்கும் ஆபத்தா?

By கே.கே.மகேஷ்

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவன், கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர். நேற்று அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களை விவரிக்கும் வகையில் வீடியோ ஒன்று மதன் டைரீஸ் என்ற யு டியூப் சேனலில், வெளியானது.

அந்த யு டியூப் சேனலை நடத்திவரும் மதன், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லியில் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தவர் என்பதால், அந்த காணொளி கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

மாநில தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலுடன்தான் இந்த வீடியோவை, தான் வெளியிடுவதாகவும் மதன் கூறியிருந்தார். பாஜகவைச் சேர்ந்த மேலும் சிலரின் வீடியோக்களையும் வெளியிட இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்தப் பாலியல் வீடியோ காட்சி ஏற்படுத்திய சர்ச்சையால், கே.டி.ராகவன் கட்சியில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், "இந்த விவகாரத்தை வெளியிட்ட யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் என்னைச் சந்தித்துப் பேசியது உண்மை. முதல் முறையாகக் கட்சி அலுவலகத்தில் அவர் என்னைச் சந்தித்துப் பேசியபோது, கட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள் பற்றிய வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் உடனடியாக அவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பிறகு அவராகவே வெளியிட்டுவிட்டார். இதுபோல இன்னும் வேறு நபர்களின் பதிவுகளும் வெளிவரவிருக்கிறது என்று மதன் சொல்லியிருப்பது அவருக்கு ஏதேனும் உள்நோக்கம் இருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. இந்நிலையில் கட்சியின் மாண்பு கருதி இதுபோலக் குற்றம் சுமத்தப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது விசாரணை நடத்த பாஜக மாநிலச் செயலாளர் மலர்கொடி தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைத்து, சாட்டப்படும் குற்றங்களில், வீடியோ பதிவுகளில் உள்ள உண்மையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருந்தார்.

இந்தச் சூழலில் இன்று மதன் ரவிச்சந்திரனையும், இந்த வீடியோவை எடுக்க உதவியாக இருந்த வெண்பா ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இது கட்சிக்குள் மேலும் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. "ஒரு பாஜக தலைவரின் லீலைகளை அத்துமீறி வீடியோ பதிவு செய்து தன்னிடம் காட்டியபோதே, மதன் ரவிச்சந்திரனை கட்சியில் இருந்து நீக்கியிருந்தால் அண்ணாமலையைப் பாராட்டலாம். அந்த வீடியோவை வெளியிடச் சொல்லி, கே.டி.ராகவனின் பதவி விலகலுக்குக் காரணமாக இருந்துவிட்டு, இப்போது மதனை கட்சியில் இருந்து நீக்குவது ஏன்?" என்று பாஜகவினர் கேள்வி கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து டெல்லி தலைமைக்கும் புகார்கள் பறந்திருக்கின்றன. எல்லாம் சேர்ந்து மாநில தலைவர் அண்ணாமலையின் பதவிக்கே வேட்டு வைக்கக்கூடும் என்று யூகங்கள் கிளம்பியிருக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE