குளக்கரையில் மலைபோல் குவிந்து கிடக்கும் திண்பண்டங்கள்

By என்.சுவாமிநாதன்

காலவதியான திண்படங்களை குளக்கரையின் ஓரத்தில் மலைபோல் குவித்து கொட்டிச் சென்றுள்ளனர். இதை குழந்தைகள் எடுத்துச் சாப்பிட்டால் பெரும் அபாயத்துக்குள் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பிருப்பதாக சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

குமரிமாவட்டம், நாகர்கோவிலை அடுத்த கணியாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட புளியடி பகுதியில் கிருஷ்ணமுத்திர குளம் உள்ளது. ஏற்கனவே போதிய பராமரிப்பு இன்றி புதர் மண்டிக் காணப்படும் இந்தக் குளத்தில் கரைப் பகுதியில் மர்ம நபர்கள் காலாவதியான திண்பண்ட பாக்கெட்களைக் கொட்டிச் சென்றுள்ளனர். இது மலைபோல் குவிந்து காணப்படுகிறது. பள்ளிக்கூடம் ஆன்லைன் வழியாக மட்டுமே நடந்து வரும் நிலையில் இந்த குளக்கரைப் பகுதியில் தினமும் சிறுவர்கள், குழந்தைகள் விளையாட வருவது வழக்கம்.

அப்போது பாக்கெட்டே திறக்காமல் இருக்கும் இந்த திண்பண்டத்தைப் பார்த்துவிட்டு அவர்கள் எடுத்து சாப்பிட்டு விடும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். நீராதாரங்களை பாழ்ப்படுத்தும்வகையில் இப்படி உணவுக்கழிவுகளைக் கொட்டிப் போட்டிருக்கும் மர்மநபர்கள் மீது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பும், உணவுப்பாதுகாப்புத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தபட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE