கடந்த ஏழு ஆண்டுகளில் மோடி அரசு மக்களிடமிருந்து 25 லட்சம் கோடி ரூபாயை சுரண்டியுள்ளது என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சாடியுள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முந்தைய காங்கிரஸ் அரசுதான் காரணம் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...,
பெட்ரோல் டீசல் வரியை குறைக்க மனமில்லாத, மக்கள் நலன் மீது அக்கரையில்லாத ஒன்றிய அரசு காங்கிரஸ் மீது பழி சுமத்துகிறது.
கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தகாலத்தில் அதை மக்கள் மீது சுமத்திவிடக்கூடாது என்பதற்காகத்தான் காங்கிரஸ் அரசால் எண்ணெய் பத்திரங்கள் கொண்டுவரப்பட்டன. பத்திரங்களுக்கு மோடி அரசு இதுவரை செலுத்தியுள்ள தொகை 71 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே. ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளில் மோடி அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி வருமானத்தின் மூலம் 25 லட்சம் கோடி ரூபாயை மக்களிடமிருந்து சுரண்டியிருக்கிறது.
இருந்தும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மனமில்லாத மக்கள் நலன் பற்றி அக்கரையில்லாத மோடி அரசு காங்கிரஸ் அரசு மீது பழியைப்போடுகிறது” என்று ஜோதிமணி காட்டமாக பதிலளித்துள்ளார்.