திருவேற்காடு | கூவம் கரை ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு: சாலை மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் கைது

By ஆர்.நாகராஜன்

பூந்தமல்லி: திருவேற்காடு பகுதியில் கூவம் கரையை ஆக்கிரமித்துள்ள குடியிருப்புகளை அகற்றக்கோரி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்ட வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு - பெருமாள் கோயில் தெரு பகுதியில் கூவம் கரையை ஆக்கிரமித்து, சுமார் 160 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், இந்தக் குடியிருப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் வருவாய்த் துறை மற்றும் நீர்வள ஆதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், வருவாய்த் துறை மற்றும் நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, கடந்த 2-ம் தேதி ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை கணக்கெடுத்து அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கைகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஏற்கெனவே எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திருவேற்காடு - பெருமாள் கோயில் தெரு பகுதியில் கூவம் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுமார் 160 குடியிருப்புகளை அகற்ற இன்று காலை நோட்டீஸ் ஒட்டுவதற்கு பூந்தமல்லி வட்டாட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் வந்தனர்.

அப்போது, நோட்டீஸ் ஒட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருவேற்காடு பஸ் நிலையம் அருகே 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை திருவேற்காடு போலீஸார் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனைத் தொடர்ந்து, வருவாய்த் துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பு குடியிருப்புகளில் அக்குடியிருப்புகளை அகற்ற நோட்டீஸ் ஒட்டினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE