சென்னை: சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச்சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அதீத அதிகாரம் படைத்த இருவர் தன்னை அணுகியதாக தெரிவித்துள்ள நீதிபதி, விசாரணையில் இருந்து விலகிஇருக்க வேண்டும் என தெரிவித்துள்ள மூன்றாவது நீதிபதியான ஜி. ஜெயச்சந்திரன், இந்த வழக்கை2 நீதிபதிகள் அடங்கிய மற்றொரு அமர்வுக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டுள்ளார்.
பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை பெண் அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபரான சவுக்குசங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவி்ட்டார். அதன்படி அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை ரத்துசெய்யக்கோரி அவரது தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனும் மற்றொரு நீதிபதியான பி.பி.பாலாஜியும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.
அதையடுத்து இந்த வழக்கு விசாரணை மூன்றாவது நீதிபதியான ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று நடந்தது. அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரனும், சவுக்கு சங்கரின் தாயார் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யனும், இடையீட்டு மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரனும் ஆஜராகி வாதிட்டனர்.
» தஞ்சை அதிமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் டிஎஸ்பி, ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி வழக்கு
» நாமக்கல்: பார்சலை கொண்டு சேர்க்காத தனியார் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்
அதையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு: இந்த வழக்கில் ஒரு நீதிபதி தகுதியின் அடிப்படையில் தீர்ப்பளித்துள்ளார். மற்றொருவர் தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும் எனக்கூறியுள்ளார். அதன்படி தற்போது தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் சட்ட விதிகளுக்கு உட்பட்டே குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தவழக்கில் இரு நீதிபதிகள் அளித்துள்ள மாறுபட்ட தீர்ப்பை முழுமையான ஒன்றாக கருத முடியாது. ஆட்கொணர்வு மனுக்களை இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வுதான் விசாரிக்க முடியும். குண்டர் தடுப்புச்சட்டத்தை ரத்து செய்வதாக இருந்தால் அதிகாரிகள் தரப்பில் பதிலளிக்க அவகாசம் அளிக்கப்பட வேண்டும். இல்லையெனில் ஒருதலைபட்சமாகி விடும்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக அதீத செல்வாக்கு மிக்க இரண்டு பேர் தன்னை அணுகியதாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். அப்படியென்றால், நியாயமாக இந்த வழக்கை அவர் விசாரிக்காமல், விசாரணையில் இருந்தே விலகியிருக்க வேண்டும். அதைவிடுத்து ரத்து செய்ய முடியாது. ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணையை 2 மாதங்களில் முடிக்க வேண்டுமென பொறுப்பு தலைமை நீதிபதியும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.