15 மண்டலங்களிலும் நவீன பொதுக்கழிப்பறைகள்: சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்

By ச.கார்த்திகேயன்

சென்னை: மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் நவீன பொதுக்கழிப்பறைகள் கட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் தற்போதுள்ள நிலவரப்படி 547 இடங்களில் கான்கிரீட் கட்டிடங்களில் பழைய கழிப்பறைகள் இயங்கி வருகின்றன. தூய்மை இந்தியா இயக்க நிதியில் 445 இடங்களில் நவீன கழிப்பறைகளை இளஞ்சிவப்பு நிறத்தில் மாநகராட்சி நிர்வாகம் நிறுவி வருகிறது. இத்திட்டத்தில் மேலும் புதிதாக கழிப்பறைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

சென்னை மெரினா கடற்கரை மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் வால்டாக்ஸ் சாலை ஆகிய இடங்களில் சிறப்பு திட்டத்தின் கீழ் மாநகராட்சி சார்பில் நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. அவற்றை தூய்மையாக பராமரிக்கும் பொறுப்பு தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

எல்இடி விளக்கு வசதி, 24 மணி நேரமும் தண்ணீர் வசதி, தூய்மை பணியாளர் சேவை இவை அனைத்தும் அங்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடங்களை எல்லாம் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் திடீரென ஆய்வு செய்தார். அப்போது, நவீன கழிப்பறைகளை முறையாக தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சி சார்பில் ராயபுரம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை மண்டலம் மெரினா கடற்கரை ஆகியவற்றில் கழிப்பறைகளை நவீனப்படுத்துவது, புதிய நவீன பொதுக்கழிப்பறைகளை கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதன்படி, சிறு பிரச்சினைகள் உள்ள 194 பொதுக்கழிப்பறைகளில் தேர்ந்தெடுத்து, அதில் 81 கழிப்பறைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

பெரிய அளவில் பணிகளை மேற்கொண்டு சீரமைக்க 88 பொதுக்கழிப்பறைகளை தேர்ந்தெடுத்து, அதில் 34 கழிப்பறைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. 90 இடங்களில் புதிய நவீன கழிப்பறைகளை கட்ட திட்டமிட்டு, மெரினா வளைவு சாலை, கலங்கரை விளக்கம், பிராட்வே ஆகிய பகுதிகளில் கட்டி முடக்கப்பட்டுள்ளன.

26 அமைவிடங்களில் இன்னும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 15 மண்டலங்களிலும் நவீன பொது கழிப்பறைகளை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் முடிவடைந்த பின்னர், அரசிடமிருந்து திட்ட அறிக்கைக்கு நிர்வாக அனுமதி பெறப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE