உ.பி. போகாதவர்கள் அங்கு நடக்கும் தேர்தல் பற்றி பேசுகிறார்கள்: ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் விமர்சனம்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: "ஒரே நாடு ஒரே தேர்தலில் என்ன தவறு இருக்கிறது?. தொலைக்காட்சிகளுக்கு வேண்டுமானால் ரேட்டிங் குறைந்து விடலாம்" என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்வில் பங்கேற்க வந்திருந்த துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “முன்பைவிட போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. கடும் நடவடிக்கைகளால் கஞ்சாவை கட்டுப்படுத்த முடியும். எங்கெல்லாம் கஞ்சா விற்கப்படுகிறதோ அதுபற்றி அதிகாரிகள் மற்றும் எனது கவனத்துக்கு கொண்டு வாருங்கள். அனைவரும் ஒத்துழைப்பு தருவது மூலம் சமூக குற்றங்களை தடுக்க முடியும். காவல்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது. போலீஸார் முழுமுயற்சியுடன் கஞ்சாவை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

ஒரே நாடு, ஒரே தேர்தலில் என்ன தவறு இருக்கிறது?. தொலைக்கட்சி சேனல்களுக்கு வேண்டுமானால் ரேட்டிங் குறையலாம். உத்தரப் பிரதேசமே போகாதவர்கள் அங்கு நடக்கும் தேர்தல் பற்றி தொலைக்காட்சியில் பேசுகிறார்கள். இங்கே உட்கார்ந்த நிலையில் அங்குள்ளோர் மனதை துல்லியமாக கண்டறிய கடவுளின் ஆசீர்வாதத்தை பெற்று விட்டார்களா எனத் தெரியவில்லை.

தினம்தோறும் டி.வி-யில் எதை எதையோ பேசுகிறீர்கள். இந்த விவாதம் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு, மக்கள் நலத்திட்டங்கள் அமல்படுத்துவதில் யார் பின்தங்கியுள்ளார்கள் என்று யாராவது பேசுகிறார்களா?.

மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் வேறு மாநிலத்தில் ஒரு தேர்தல் வந்து விடுகிறது. தேர்தலை பற்றி மட்டுமே பேசுகிறீர்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் என வரும்போது நிச்சயமாக மக்கள் கவனமும் ஊடகத்தின் கவனமும் முன்னேற்றத்தை நோக்கி மாறும். அதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் அத்தியாவசியம் எனக் கருதுகிறேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE