தருமபுரியில் மழை பெய்தும் கோடை உழவுக்கு ஈரமில்லாததால் நிலக்கடலை விவசாயிகள் வேதனை

By KU BUREAU

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ள நிலையிலும் தருமபுரி, நல்லம்பள்ளி வட்டாரங்களில் பெய்த மழை கோடை உழவுக்கே போதிய ஈரமில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் பரவலாக கடந்த 3 வாரங்களாக மழை பெய்து வருகிறது. பென்னாகரம், ஒகேனக்கல், பாலக்கோடு, மாரண்டஅள்ளி ஆகிய பகுதிகளில் சில நாட்கள் கனமழை பெய்தது. ஆனால், தருமபுரி, நல்லம்பள்ளி வட்டாரங்களில் மிதமான மழையே பதிவாகி வருவதால் கோடை உழவை ஆழமாக மேற்கொள்ளும் அளவுக்குக் கூட மண்ணில் ஈரம் ஏற்படவில்லை. இதனால் விதைப்பிலும் பருவம் தவறும் சூழல் ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இது குறித்து நல்லம்பள்ளி வட்டம் ஏலகிரியான் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த மாதையன் உள்ளிட்ட விவசாயிகள் கூறியது: பருவம் தவறாமல் மழை பெய்து வந்த காலத்தில் பங்குனி மாதத்திலேயே கோடை உழவுக்கு உதவிடும் வகையில் மழை பெய்யும். இந்த மழை ஈரத்தில் பலர் உழவடித்து உடனடியாக மானாவாரி எள் விதைப்பிலும் ஈடுபடுவர். நடப்பு ஆண்டில் பங்குனியில் தூறல் கூட இல்லை. சித்திரை மாதத்தில் மாவட்டத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்தபோதும் தருமபுரி, நல்லம்பள்ளி வட்டாரங்களில் மண்ணில் ஆழமாக ஈரம் ஊறும் அளவுக்கு மழை பெய்யவில்லை.

சித்திரை மாத மத்தியில் தொடங்கி வைகாசி மாத இறுதிக்குள் மானாவாரி நிலக்கடலை விதைப்பை மேற்கொள்ள வேண்டும். ஆனால், வைகாசியில் தான் உழவுப் பணியே நடந்து வருகிறது. இந்த உழவில் மேல் மண் மட்டுமே புரண்டு விழுகிறது. ஆழம் காண உழவடிக்க முடியவில்லை. அடுத்த மழைக்கு பிறகு ஆழமாக உழுது மண்ணை ஆறவிட்டு பின்னர் தான் நடப்பு ஆண்டில் நிலக்கடலை விதைப்பை மேற்கொள்ள முடியும்.

கேழ்வரகு, சோளம், கம்பு போன்ற தானிய பயிர்கள் விதைக்க அவகாசம் இருக்கிறது. இந்த தானியங்களுக்கு, ‘ஆனியில் விதைப்பு, ஆடியில் முளைப்பு’ என மூத்தவர்கள் குறிப்பிடுவார்கள். எனவே, இந்த தானியப் பயிர் விதைக்கவுள்ள விவசாயிகள் அடுத்தடுத்த மழைகளின்போது உழவடித்து நிதானமாக நிலத்தை தயார் செய்து ஆனியில் விதைப்புக்கு ஆயத்தம் ஆவார்கள். ஆனால், எங்களைப் போன்ற நிலக்கடலை விவசாயிகள் தான் உழவுக்கே போதிய ஈரமின்றி தவித்து வருகிறோம். இவ்வாறு கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE