காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் பதிவான 7,550 தபால் வாக்குகளில் 1,101 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன.
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 7,550 தபால் வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில், 1,101 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன. 6,449 வாக்குகள் மட்டுமே செல்லத்தக்கவையாக எடுத்துக்கொள்ளப்பட்டன. தபால் வாக்குகளில் திமுக வேட்பாளர் ஜி.செல்வம் 3,066 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 1,580 வாக்குகளும், பாமக வேட்பாளர் வி.ஜோதி 1,139 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் வி.சந்தோஷ்குமார் 414 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
பெரும்பாலான தபால் வாக்குகளை அரசு ஊழியர்கள் தான் செலுத்துவார்கள் என்பதால் அதில் 1,101 வாக்குகள் செல்லாமல் போனது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷிடம் கேட்டபோது, “தேர்தல் பணிக்குச் செல்லும் அரசு ஊழியர்கள், ராணுவத்தில் பணியாற்றுபவர்கள், காவல்துறையில் பணியாற்றுபவர்கள் உள்ளிட்டோர் தபால் வாக்குகளை செலுத்தி உள்ளனர். அவர்களுக்கு தபால் வாக்களிப்பது குறித்து முறையான அறிவிப்புகளை கொடுத்தோம்.
இவர்களுடன் மாற்றுத் திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்களும் தபால் வாக்குகளை அளித்துள்ளனர். அவர்களுக்கும் முறையான அறிவிப்புகளை கொடுத்திருந்தோம். அதனைப் பின்பற்றுவதில் அவர்கள் தவறி இருக்கலாம் எனக் கருதுகிறோம். என்றபோதிலும் கடந்த தேர்தலைவிட இம்முறை செல்லாத வாக்குகள் குறைந்துள்ளன” என்றார்.
» கள்ளக்குறிச்சியில் நாம் தமிழர் கட்சியின் தாக்கம்!
» விடாப்பிடி விருதுநகரில் ஒவ்வொரு சுற்றிலும் ‘திகில்’ - கண்கலங்கிய விஜய பிரபாகரன்