மதுரை: மதுரையில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், ஆறு சட்டப்பேரவை தொகுதியில் அமைச்சர் பி.மூர்த்தியின் தொகுதியான கிழக்கு தொகுதியில் மட்டும் 2-ம் இடம் பெற்ற பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசனை விட 72 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வென்றுள்ளார்.
மதுரையில் எம்பி தொகுதியில் மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தியம், மதுரை மேற்கு ஆகிய 6 தொகுதிகள் உள்ளன. மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் 430323 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசன் 2,20,914 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பெற்றார். அதிமுக வேட்பாளர் டாக்டர் ப.சரவணன் 2,04,804 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யாதேவி 92,879 வாக்குகள் பெற்று நான்காம் இடம் பெற்றார்.
இதில் மேலூர் தொகுதியில் மார்க்சிஸ்ட்-69,258 வாக்குகள், பாஜக-35,952 வாக்குகள் பெற்றதில் வித்தியாசம் 33,306 வாக்குகள். அதேபோல் கிழக்கு தொகுதியில் மார்க்சிஸ்ட்- 1,15,201 வாக்குகள், பாஜக-43,120 வாக்குகள், வித்தியாசம்-72,081 வாக்குகள். வடக்கு தொகுதியில் மார்க்சிஸ்ட்-59,955 வாக்குகள், பாஜக 30,218 வாக்குகள், வித்தியாசம் 29,737 வாக்குகள். தெற்கு தொகுதியில் மார்க்சிஸ்ட்-45,783 வாக்குகள், பாஜக-42,073 வித்தியாசம் 3710. மத்தியம் தொகுதி மார்க்சிஸ்ட்-63,516 வாக்குகள், பாஜக-28,864, வித்தியாசம்-34,652 வாக்குகள்.
மேற்கு தொகுதியில் மார்க்சி்ஸ்ட்-74,488 வாக்குகள், பாஜக-38,808 வித்தியாசம் 35,680 வாக்குகள். தபால் வாக்குகள் மார்க்சிஸ்ட்-2,122 வாக்குகள், பாஜக-1,879 வாக்குகள், 243 வாக்குகள் வித்தியாசம். இதில் ஆறு தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் 4,30,323 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசன் 2,20,914 வாக்குகளும் பெற்றனர். இதில் 2,09,409 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில் அமைச்சர் பி.மூர்த்தி தொகுதியான கிழக்கு தொகுதியில் மட்டும் 72081 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றியை தக்கவைத்துள்ளார்.
இது குறித்து திமுகவினர் கூறுகையில், அமைச்சர் பி.மூர்த்தி கிழக்கு தொகுதியில் அரசு நலத்திட்டங்கள், மாநகராட்சி விரிவாக்கம், பாதாள சாக்கடை, குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செயல்படுத்தி வருகிறார். தொகுதி மக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறார். அவர் மீதும், அரசு மீதுள்ள நம்பிக்கையில் வாக்களித்துள்ளனர். தேர்தல் பணிகளை திட்டமிட்டு செய்ததால் மற்ற தொகுதிகளை விட 72 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார், என்றனர்.