பள்ளபட்டியில் மழைநீருடன் வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர் - குடியிருப்புவாசிகள் அவதி

By KU BUREAU

கரூர்: கரூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக வெப்பம் அதிகமாக இருந்தநிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதில், நேற்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக அரவக்குறிச்சியில் 33.80 மி.மீ. மழை பதிவாகியது.

பள்ளபட்டி பகுதியில் நேற்று முன்தினம் அரை மணி நேரத்துக்கு மேலாக பெய்த கனமழை காரணமாக, பள்ளபட்டி கணக்குப் பிள்ளை தெருவில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியது. தொடர்ந்து, மழைநீருடன் சேர்ந்து குடியிருப்புகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால், மக்கள் அவதிக்குள்ளாகினர். மேலும், கழிவுநீர் புகுந்ததால் துர்நாற்றம் வீசியது.

இது குறித்து அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கூறுகையில், ‘‘முறையான வடிகால் வசதி இல்லாததால், மழைக் காலங்களில் மழைநீர் கழிவுநீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், மழை பெய்யும் போதெல்லாம் அவதிப்பட்டு வருகிறோம்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE