கடலூர், விழுப்புரத்தில் பரவலாக மழை

By KU BUREAU

கடலூர் / விழுப்புரம்: கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால்மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி முதல் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அக்னி நட்சத்திரம் ஏப். 4-ம் தேதி தொடங்கிய நிலையில் 108 டிகிரி வரை வெப்பம் பதிவானது. இந்நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடை மழை திடீரென்று பெய்தது. அதன் பிறகு வழக்கம் போல் வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியது.

தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்தாலும் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கோடை மழை எதிர்பார்த்த அளவு இல்லாமல் குறைவாகவே காணப்பட்டது. இதற்கிடையில் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வானம் கருமேகங்களுடன் அவ்வப் போது சாரல் மழை பெய்த வண்ணம் இருந்த நிலையில், நேற்று முன்தினம் பகல் முழுவதும் கருமேகங்கள் சூழ்ந்தன. தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் காலை 10 மணிவரை விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மழை அளவு: திருவெண்ணெய்நல்லூர் 2 மிமீ, அரசூர் 2 மிமீ, மரக்காணம் 13 மிமீ, திண்டிவனம் 10 மிமீ, வானூர் 3 மிமீ, கஞ்சனூர் 4 மிமீ, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நேற்று வரை 48.70 மிமீ, சராசரியாக 2.32 மிமீ மழை பதிவானது.

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை மழை பெய்தது. கடும் வெயிலில் அவதியடைந்த மக்கள் இந்த மழையால் மகிழ்ச்சியடைந்தனர்.

நேற்றைய மழை அளவு: காட்டுமன்னார்கோவில் 38 மிமீ, லால்பேட்டை 27 மிமீ, பரங்கிப்பேட்டை 21.6 மிமீ, வேப்பூர் 21 மிமீ, தொழுதூர் 15மிமீ, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 14.4 மிமீ, கடலூர் 11.1 மிமீ, விருத்தாசலம் 11 மிமீ, சிதம்பரம் 10 மிமீ, சேத்தியாத்தோப்பு 7.4 மிமீ, புவனகிரி 7 மிமீ மழை பெய்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE