சாதி, மத ரீதியாக வாக்கு சேகரிப்பதை கண்காணிக்க ஆணையம் கோரி வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By KU BUREAU

சென்னை: தேர்தல் நேரங்களில் சாதி, மத, மொழிரீதியாக வாக்கு சேகரிக்கும் நடவடிக்கையை கண்காணித்து தடுக்க, ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய சுதந்திரமான ஆணையம் அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியைச் சேர்ந்த ராஜேஷ் அனூர் மகிமைதாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:

தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகளின் சார்பிலும், சுயேச்சையாகவும் போட்டியிடும் வேட்பாளர்கள் சாதி, மதம் மற்றும் மொழிரீதியாக வாக்குகளை சேகரிப்பது என்பது ஊழல் நடவடிக்கை என்பதால் அதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மேலும் மக்கள் மத்தியில் வெறுப்புபேச்சுக்களை பேசி அதன்மூலமாகவும் ஆதாயம் தேடுவதை கட்டுப்படுத்த மாநில அரசுகளும், தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளின் வாயிலாக உத்தரவிட்டும் அதை யாரும் பொருட்படுத்துவதில்லை.

தேர்தல் நேரங்களிலும், தேர்தல் அல்லாத காலகட்டங்களிலும் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், அக்கட்சிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் தங்களின் அரசியல் சுயலாபத்துக்காக சாதி, மதம், மொழி ரீதியாக மக்களை பிளவுபடுத்தி பிரிவினையை ஏற்படுத்தி வருகின்றனர்.

நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகும், அரசியல் கட்சிகள் இதுபோன்ற பிரித்தாளும் கொள்கையை பயன்படுத்தி மக்களிடம் அரசியல் ரீதியாக ஆதாயம் தேடி வருவதுஅரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. தேர்தல் நேரங்களில் மட்டும் இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கும் தேர்தல் ஆணையம், தேர்தல் முடிந்தபிறகு இந்தநடவடிக்கைகளை கண்டுகொள்வது கிடையாது.

எனவே இதுதொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புகள் குறித்து பொதுமக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும். அந்த தீர்ப்புகளை அமல்படுத்துவதைக் கண்காணித்து இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய சுதந்திரமான ஆணையம் அமைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE