மிக தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

By KU BUREAU

சென்னை: வட தமிழக உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம்,புதுச்சேரியில் ஜூன் 8 வரை மிதமானமழை பெய்யும். நீலகிரி, கோவை, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்கு பருவமழை வட தமிழக உள் மாவட்டங்களில் மிகதீவிரமாகவும், இதர மாவட்டங்களில் தீவிரமாகவும் உள்ளது. அதனால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 10செ.மீ., தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 9 செமீ, சேலம் மாவட்டம் கரியகோவில் அணை, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், தேனி மாவட்டம் பெரியகுளம், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 7 செ.மீ., தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி, திருப்பூர் மாவட்டம் அவிநாசி, சேலம் மாவட்டம் கங்கவல்லி, ஈரோடு மாவட்டம் நம்பியூரில் 6 செமீ மழை பதிவாகியுள்ளது.

தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் இன்று (ஜூன் 4) முதல் 8-ம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (5-ம் தேதி) நீலகிரி, கோவை மாவட்ட மலை பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின்ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புஉள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் அதிகபட்சம் 55 கி.மீ. வேகம் வரை சூறாவளி காற்று வீசக்கூடும்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE