ஆலயங்களை ஆட்கொண்ட  அற்புதக் கலைஞன்!

By காமதேனு

ஜெ.சரவணன்
saravanan.j@kamadenu.in

அடையாளங்கள் அவரவரது செய்கைகளால் உருவாக்கப்படுபவை. அந்த வகையில் தேவாலயங்கள் என்றால் ரஃபேல், ரஃபேல் என்றால் தேவாலயங்கள் என்று சொல்லும் அளவுக்கு உலகம் முழுவதும் உள்ள பிரபல தேவாலயங்களில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் ஓவியர் ரஃபேல்.

மறுமலர்ச்சி கால ஓவியர்களில் ஒருவரான ‘ரஃபேல் சான்ஸியோ டா அர்பினோ’ 37 வயது வரையே வாழ்ந்தார். அதற்குள்ளாக இவர் இருநூற்றுக்கும் மேலான ஓவியங்களை வரைந்தார். அவற்றில் பெரும்பாலானவை அளவில் மிகப்பெரியவை. இவருடைய ஓவியங்கள் எந்த வகையிலும் யாரையும் புண்படுத்தாதவை. அழகானவை. அனைத்துமே கிறிஸ்துவையும் மேரியையும் கொண்டாடும் ஓவியங்கள். அதற்கு முக்கியக் காரணம் அவர் தாயின் அன்புக்காகவும் அரவணைப்புக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் ஏங்கியவர். ஏழு வயதில் தாயை இழந்தார். அவர் ஏங்கிய தாயின் பாசத்தை விவிலியத்தில் இருந்து கண்டெடுத்தார்.

ரஃபேலின் அனைத்து ஓவியங்களும் உலகின் பெரும்பாலான தேவாலயங்களில் பிரதியெடுக்கப்பட்டிருக்கின்றன. இவரது தந்தையும் ஓர் ஓவியர். அதனால் இயல்
பிலேயே இவருக்கு ஓவியத்தின் மீது அதிக ஈர்ப்பு இருந்தது. தாயை இழந்த பின்னர், தனது தனிமையையும் ஏக்கத்தையும் ஓவியங்கள் வரைவதன் மூலம் நிரப்பிக்கொண்டிருந்தார். இவர் எந்த ஓவியத்தை வரைந்தாலும் அதிலிருந்து கருணையும் இரக்கமும் பாசமும் சொட்டும். அதைப் பார்ப்பவர்களால் உணர முடியும்.

17 வயதிலேயே மாபெரும் கலைஞராகப் பேரெடுத்தார் ரஃபேல். லியனார்டோ டாவின்சி, மைக்கேல் ஏஞ்சலோ போன்ற ஓவியர்களுடனான நட்பு இவரை மேன்மேலும் வளர்த்தது. மறுமலர்ச்சி காலத்தின் மூவேந்தர்களாக இவர்களை உலகம் கொண்டாடியது. இரண்டாம் ஜூலியஸ் போப் அழைப்பின் பேரில் வாட்டிகன் தேவாலயத்தில் ரஃபேல் தனது ஓவியங்களை பிரம்மாண்டமாக வரைந்து அழியாத இடம் பிடித்தார்.

ரஃபேலுக்குப் பெண்கள் மீது அதீத காதல் இருந்தது. ஆனால், இறுதிவரை இவர் திருமணம் செய்துகொள்ளவே இல்லை. இவரது முக்கியமான ஓவியங்களாக, கன்னி மேரியின் திருமணம், மேரியும் குழந்தைகளும், சிஸ்டைன் மடோனா, லேடி வித் தி யூனிகார்ன், செயின்ட் ஜார்ஜ் மற்றும் டிராகன், டோனா வேலாட்டா உள்ளிட்ட ஓவியங்களைச் சொல்லலாம்.  இவருடைய ‘மடோனா’ ஓவியத் தொடரில் வரையப்பட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட ஓவியங்களை யாரும் நிகழ்த்த முடியாத பேரதிசயம் என்றே சொல்லலாம்.

கன்னி மேரியின் திருமணம் என்ற ஓவியத்தை ரஃபேலின் ஆசிரியரும் இத்தாலிய ஓவியருமான பியட்ரோ பெருகினோவின் ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டு வரைந்தார். 

இந்த ஓவியம் கன்னி மேரிக்கும் ஜோசப்பிற்கும் நடந்த திருமண விழாவை சித்தரிக்கிறது. 

இந்த ஓவியத்தின் மூலம், ரஃபேல் குருவை மிஞ்சிய சிஷ்யராக மாறியிருப்பதை உணர முடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE