வெள்ளை துரோகமும் கறுப்பு காதலும்

By காமதேனு

கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in

ஏந்திழை - நாவல்
ஆசிரியர் - ஆத்மார்த்தி
வெளியீடு - யாவரும் 
சென்னை
தொடர்புக்கு: 
யாவரும் பதிப்பகம்
சென்னை
போன் - 98416 43380
விலை - 225 ரூபாய்

கவிதை, சிறுகதை, கட்டுரை என்று பல தளங்களில் தன் இலக்கிய முத்திரையைப் பதித்து வரும் ஆத்மார்த்தியின் முதல் நாவல் ஏந்திழை. ஏந்திழை என்னும் பேரழகியின் வனப்பே அவளை இவ்வுலகின் எல்லா துயரங்களுக்கும் இட்டுச் சென்றது என்ற ஒற்றை வரி கதையே இப்பெரும் நாவலுக்கு வழி கோலுகிறது.  1915 களில் வாழ்ந்த ஏந்திழையும் 2019ல் வாழும் ஏந்திழையும் எவ்விடத்தில் இணைகிறார்கள் என்பதே நாவலின் சுவாரசியம். விபத்தில் சிக்கி சிகிச்சை பெறும் ஒருவனின் மன ஓட்டத்தில் அவனது முன்னாள் காதலும் காதலியின் முன் ஜென்மமும் தொட்டுத் தொடரும் சுவாரசியமான கதை அமைப்புதான்.  அழகி என்ற பதத்தை மிக அழுத்தமாகப் பதிவு செய்த ஆசிரியருக்கு வாழ்த்துகள். ஆசிரியரின் நகைச்சுவை உணர்வும் கவி மனமும் நாவலை வெகு எளிதாக நகர்த்திச்செல்ல உதவியாக உள்ளன. 

நிகழ்கால ஏந்திழை ஒரு புத்தகத்தை விரித்துப் படிப்பதன் மூலமே சட்டென்று முன் ஜென்மத்துக்குள் நுழையும் கதை, வெள்ளைக்கார துரையின் மன ஓட்டங்களை ஒரு பன்றி வேட்டை மூலம் விளக்கியிருப்பது எனப் பல இடங்களில் ஆச்சரியமூட்டுகிறார் ஆசிரியர். நிகழ்கால மாடர்ன் ஏந்திழை. பிரிட்டிஷ் காலத்து ஏந்திழை என இரு அழகிகளின் காதலும் காமமும் கதையாய் விரியும் தருணங்களும் நன்று. தன் கண்ணில் பட்ட ஏந்திழை என்ற அழகிக்காக தனி மாளிகை கட்டி குடிபுக நினைக்கும் வெள்ளைக்கார ஷெனாய் துரையின் காதலும் வன்மமுமே இது ஒரு முழு நாவலாக வழி செய்யும்போது எதற்கு நவீனகால ஏந்திழையும் அவளின் காதல் கதையும் என்று தெரியவில்லை. பைத்தியமாகும் ஏந்திழைக்கும் துறவியாகும் ஏந்திழைக்கும் ஏதோ ஒரு புள்ளியில் வாசகன் சிறு முடிச்சைக் கணக்கிட்டுக்கொள்வது போலவே நாயகனின் கதாபாத்திரத்துக்கும் வெள்ளைக்கார ஷெனாய் துரை கதாபாத்திரத்துக்கும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முடியும். 

ஆனாலும் நாயகன் விவரிக்கும் பல காதல்கள் செயற்கைத்தனத்துடன் தேவையற்று இருக்கின்றன.மிகச் சில கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஷெனாய் துரையின் கதையைச் சுருக்கமாகச் சொல்லியிருந்தால் பிரமாதமான நாவலாய் வந்திருக்கும். ஷெனாயின் மனநிலையை ‘ தோல்வியை விடக் குரூரமானது ஆட்டத்தை மறுபடி ஆட நிர்பந்திப்பது’ என்று பொட்டில் அடித்தாற்போல் சொல்லத் தெரிந்த ஆசிரியருக்கு ஏனோ பிற விவரங்கள் கைகூடவில்லை. நாவலில் ஒரு இடத்தில் நாயகனின் கூற்றாக எதிர்பாலினம் குறித்து ரொம்ப அலட்டிக்கிறது இல்லை என்பதாய் ஒரு வரி வருகிறது. ஆனால் நாவல் முழுவதுமே பெண் குறித்துதான் அதிகமாய் பேசப்படுகிறது. முன் ஜென்மத்துக் கதையில் வரும் அத்தனை சம்பவங்களும் நிகழ்காலத்திலும் நிகழ வேண்டிய அவசியமில்லையே... 

அப்படி நிகழ்வதற்காகவே ஆசிரியர் உருவாக்கியிருக்கும் பாத்திரங்கள் அலுப்பூட்டுகின்றன.  

நாயகனையும் வாசகரையும் துறவியாகும் ஏந்திழை ஏமாற்றினாலும் மனச்சிதைவுக்குள்ளாகும் ஏந்திழை ஏமாற்றவில்லை.  

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE