வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in
“நல்லா கேட்டுக்க பாச்சா, இன்னைக்கு அரசியல் இருக்கிற இருப்புல யார் எந்தப் பக்கம் எப்ப போவாங்கன்னே தெரியலை. அதனால, தலைவர்களோட மனநிலை சட்னு மாறுறதுக்குள்ள சட்டுபுட்டுன்னு பேட்டிகளை முடிச்சிட்டு வா” என்று பாச்சாவிடம் சொன்ன ஆசிரியர், “பையனைப் பத்திரமா கூட்டிட்டுப் போய்ட்டு கூட்டிட்டு வரணும். சரியா?” என்று பைக்குக்கும் பாடம் சொல்லி அனுப்பிவைத்தார். 20-20 மேட்ச் விறுவிறுப்புடன் நடந்து முடிந்த மும்பை ‘டே அண்ட் நைட்’ அரசியல் டெஸ்ட் மேட்சைப் பார்த்த அசதியில் இருந்த பாச்சாவும் பைக்கும், சற்று சோர்வுடனேயே அன்றைய பயணத்தைத் தொடங்கினர்.
முதலில் தினகரன் இல்லம்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அமமுகவின் ஆலோசனைக் கூட்டத்தில் ‘ஒன்றுக்கும் மேற்பட்ட’ தொண்டர்கள் வந்திருந்த தித்திப்புத் திகைப்பில் ஆழ்ந்திருந்தார் தினகரன்.
“என்ன சார், திடீர்னு கட்சிப் பணிகள்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டீங்க? அரசியல் களமே ஆடிப்போய்டும் போலயே” என்று பாச்சா சிரிப்புடன் கேட்டத்தை சீரியஸாகவே எதிர்கொண்ட தினகரன், “என்னாலயே நம்ப முடியல. ஏதோ டாக்குமென்ட்ஸ் தேடிட்டு இருக்கும்போது, கட்சி லெட்டர் பேடு தட்டுப்பட்டுச்சு. ஆஹா, சொந்தமா சின்னம்தான் இல்ல… சொல்லிக்கிறதுக்குக் கட்சின்னு ஒண்ணு இருக்கேன்னு கூட்டத்தைக் கூட்டினேன்… அதுக்கு இவ்ளோ பேர் வருவாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை” என்று நா தழுதழுத்தார்.
“சரி இடைத்தேர்தலைப் புறக்கணிச்சஅமமுக, உள்ளாட்சித் தேர்தலை உற்சாகமா எதிர்பார்க்கிற மர்மம் என்னவோ?” என்று கேட்ட பாச்சாவை, அலட்சியமாகப் பார்த்த மக்கள் செல்வர், “உள்ளாட்சித் தேர்தல்கூட பெரிய விஷயம் இல்லப்பா எங்களுக்கு. 2020-ல இந்தியா வல்லரசா ஆகுதோ இல்லையோ, 2021-ல தமிழ்நாட்டுல நல்லரசு வந்துடும். அதை நாங்கதான் தருவோம். அப்போ திமுகவும் அதிமுகவும் சீன்லயே இருக்காது” என்று திகைப்பூட்டினார்.
“அது சரி, உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு மட்டுமில்லாம, அதிமுக தலைமை கிட்ட இருந்து இன்னொரு அறிவிப்பையும் அமமுக தொண்டர்கள் எதிர்பார்க்கிறாங்க போல?” என்று கேட்ட கேள்வியால், துணுக்குற்ற தினகரன் அடுத்த நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னர், எஸ்கேப்பானான் பாச்சா.
அடுத்து முதல்வர் ஈபிஎஸ் இல்லம்.
ஒருபக்கம் பொதுக்குழுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது, மறுபுறம் பாஜக அரசுக்கே ஜெர்க் கொடுக்கும் வகையில் அதிர்ச்சி அறிக்கைகளை விடுவது என்று அடுத்தடுத்து சிக்ஸர் அடித்துவரும் தெம்பில், ரஜினி நடித்த ‘நான் அடிமை இல்லை’ படத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார் பழனிசாமி.
“என்ன சார், உட்கட்சித் தேர்தல்ல போட்டியிட கட்சி அடிப்படை உறுப்பினரா அஞ்சு வருஷம் இருக்கணும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்னு எல்லாருக்கும் இதே கண்டிஷன்தான்னு கண்டிஷனா இருக்கீங்கபோல? ‘அவங்க’ வெளில வந்தாலும் ஆபத்து வரக்கூடாதுங்கிற முன்னெச்சரிக்கையா?” என்றான் பாச்சா.
“வர்றது வரட்டும்னு வாய்க்கு வந்தபடி பேசுற ஆளுங்கப்பா நாங்க. மோடியே தேடி வந்தா பவ்யமா வணக்கம் வைப்போம். பாதகமான திட்டம் கொண்டுவந்தா பயங்கரமா எதிர்ப்போம். நாங்க யாருக்கும் அடிமைகள் இல்லை” என்றபடி காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டார்.
“ஆனாக்கா, தொடர்ந்து உங்க அரசு மேல நிர்வாக ரீதியான குறைகளை மத்திய அரசு மறைமுகமா வச்சுக்கிட்டே இருக்கே… காற்று, குடிநீர், உணவுன்னு எல்லாமே மோசம்னு மோடி அரசு சொல்லுதே?” என்று முதல்வரின் மூடைத் திசைதிருப்பினான் பாச்சா.
கேள்வியின் மற்ற அம்சங்களைக் கிஞ்சித்தும் பொருட்படுத்தாத முதல்வர், ‘மறைமுகம்’ என்ற வார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு பதிலடியை ஆரம்பித்தார்.
“திமுக தான் மறைமுகமா அரசியல் பண்ணிட்டு இருக்கு. உள்ளாட்சித் தேர்தல்ல தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தலைக் கொண்டுவந்ததே ஸ்டாலின்தான். இப்போ அதே ஸ்டாலின் எதிர்க்கிறார். நேரடி அரசியல்னா இதோ எங்களை மாதிரி, எதுவும் யோசிக்காம கன்னாபின்னான்னு களத்துல விளையாடணும்” என்று முதல்வர் சொன்னதும், “அதுசரி, இப்பல்லாம் முழுசா அஞ்சு வருஷம் முதல்வரா இருக்கிறதுக்கு ஆளாளுக்கு அல்லாட வேண்டியிருக்கு. உங்களுக்குத்தான் அந்த அவஸ்தையே வராம ‘மூலவர்’ பார்த்துக்கிறாரே” என்றதும் வடக்கு திசை நோக்கிக் கலவரத்துடன் கைகளைக் கூப்பி வணங்கிய முதல்வர், “கண்ணு வச்சிடாம கிளம்புய்யா முதல்ல…” என்றார் வேகமாக!
மேலும் களைப்படைந்திருந்த பாச்சாவிடம், “அடுத்து சீமான்” என்று பைக் நினைவூட்டியதும், கலவரமும் தொற்றிக்கொண்டது. “தோ பாரு… செந்தமிழனின் சீற்றம்” என்று பைக் காட்டிய வீடியோவைச் சற்று நேரம் பார்த்ததும், பதற்றம் போய் பகபகவென்ற சிரிப்பு பாச்சாவைப் பற்றிக்கொண்டது.
சீமான் இல்லம்.
தரையிறங்கியபோது அவருக்குப் பின்னால், ஒரு தம்பி கையில் நோட்டும் பேனாவுமாக அலைந்து திரிந்ததைப் பார்க்க முடிந்தது. வாக்கிங் போவது, வானத்தைப் பார்த்து முறைப்பது, மீசையை நிமிண்டுவது, மீண்டும் முறைப்பது என்று அண்ணனின் ஒவ்வொரு அசைவையும் பின்னால் இருந்த அந்தத் தமிழ்ப் பிள்ளை குறுகுறுவென பார்த்தபடி குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார்.
“என்னண்ணே, நீங்க வீராவேசமா சாப்பிடுற அழகை விடுதலைப் புலிகள் குறிப்பெடுத்தது மாதிரி, இங்கேயும் அதுக்குன்னு ஒரு ஆளை ஏற்பாடு பண்ணிட்டீங்களா?” என்றான் பாச்சா.
“அதெல்லாம் நான் மாத்தி எழுதிட்டு இருக்கிற உலக வரலாற்றுக்கான குறிப்புகள் தம்பி. நான் தமிழ்நாட்டோட ‘அதிபரா’ ஆனதுக்கு அப்புறம், ‘ராஜிவ் காந்தி ஒரு சரக்கு விமான பைலட். விமான விபத்துல இறந்துபோய்ட்டார்’னு வரலாறையே மாத்தி எழுதப்போறேன்…(புஹா...புஹா). அதைப் படிச்சாத்தான் ஆடு மாடு மேய்க்கிற அரசுப் பணிகள் கிடைக்கும்னு சட்டமே கொண்டுவரப்போறேன்” என்று மீசையை சீப்பால் சீவிக்கொண்டார் சீமான்.
“ஆனா, இப்பல்லாம் நீங்க சொல்ற ‘கதை’களுக்குக் கைத்தட்டலே குறைஞ்சிடுச்சு போல? தம்பிகள் நிஜமான வரலாறு படிக்க ஆரம்பிச்சுட்டாங்களா?” என்று வம்பிழுத்தான் பாச்சா.
சட்டென்று ஆவேசமான சீமான், “இப்படியெல்லாம் எகத்தாளம் பேசுறவங்களை என் இதயச் சுவத்துல குறிச்சி வச்சிருக்கேன். சீக்கிரம் குறி வச்சுடுவேன்” என்று வெறித்தனம் காட்டியவர் மறுகணமே, “இப்படித்தான் ஒரு தடவை…” என்று இலங்கைப் பயணத்தில் நடந்த ‘புதிய கதை’ ஒன்றைச் சொல்லிவிட்டு, “உன்னால நம்ப முடியுதா பாரு…” என்றார் பெருமிதச் சிரிப்புடன்.
“முடியல...” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான் பாச்சா.