லாலாபேட்டை குகைவழிப் பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதி

By ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. லாலாபேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதன் காரணமாக கரூர் திருச்சி ரயில் பாதையில் லாலாபேட்டை குகை வழிப்பாதையில் சுமார் 5 அடிக்கு மேல் மழைநீர் தேங்கியது.

இதனால் நேற்றிரவு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாலை முதல் தண்ணீர் வடிய தொடங்கிய நிலையிலும் சுமார் இரண்டரை அடிக்கு மேலாக இன்று (ஜூன் 3ம் தேதி) தண்ணீர் தேங்கி நின்றது.

இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் தேங்கி நின்ற மழைநீரில் சென்றதால் சைலன்ஸரில் தண்ணீர் புகுந்து வாகனம் நின்றதால் பலரும் மழைநீரில் இறங்கி வாகனங்களை தள்ளிக்கொண்டு சென்றனர். மேலும் ஸ்டார்ட் ஆகாத வாகனங்களை பழுது நீக்க மெக்கானிக்கிடம் கொண்டு சென்றனர்.

மழைக்காலங்களில் குகை வழிப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் குகை வழிப்பாதையின் இருபுறங்களிலும் பாசன வாய்க்கால்கள் செல்வதால் தண்ணீர் வடியாமல் ஊற்றெடுக்கிறது. எனவே, ரயில்வே மற்றும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை தண்ணீரை வெளியேற்றவேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE