வண்டலூர் பூங்கா செவ்வாய்க்கிழமை திறந்திருக்கும் என அறிவிப்பு

By ச.கார்த்திகேயன்

சென்னை: பள்ளி குழந்தைகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் வசதிக்காக சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

வண்டலூர் பூங்காவில் 180 வகையான இனங்களை சார்ந்த 2 ஆயிரத்து 500 வன உயிரினங்கள் பராமரிக்கப்படுகின்றன. சென்னை, புறநகர் பகுதி மக்களுக்கு முக்கிய பொழுதுபோக்கு இடமாகவும் இது திகழ்கிறது. தினமும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பார்வையாளர்கள் மேலும் அதிகமாக வருவது வழக்கம்.

வாரந்தோறும் பூங்காவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் செவ்வாய்க்கிழமைகளில் பூங்கா திறக்கப்படுவதில்லை. தற்போது பள்ளி குழந்தைகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகள் பூங்காவை பார்வையிடுவதற்கு ஏதுவாக நாளை (ஜூன் 4, செவ்வாய்க்கிழமை) பூங்கா திறக்கப்படும் என்று வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE