ஒவ்வொரு முறையும் சாதிச்சான்றா? - பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கையின்போது அலைக்கழிப்பு @ புதுச்சேரி

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: பள்ளி. கல்லூரிகளில் சேர சான்றிதழ் பெற அலைக்கழிப்பதால் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த 80 பேர் கைது செய்யப்பட்டனர். ஒவ்வொரு முறையும் சாதி சான்று வாங்க சொல்வதுடன் பழைய சான்றை ஏற்க மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

புதுச்சேரியில் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளில் சேர வருமான சான்றிதழ் இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ் பெற கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு செல்வோர் அலைக்கழிக்கப்படுவதாலும், ஊழலைத்தடுக்கக்கோரியும் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக சமூக அமைப்புகள் அறிவித்திருந்தன.

அதன்படி இன்று திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் லோகு அய்யப்பன் தலைமையில் பல்வேறு சமூக அமைப்பினர் விவிபி நகர் ஆர்ச் பகுதியில் இருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீஸார் ஆட்சியர் அலுவலகம் அருகே தடுத்து நிறுத்தினர். இதையடுத்து சமூக அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து அவர்களை கலைந்து செல்ல போலீஸார் கூறினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. அதனால் 80க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், மாணவர்கள் பள்ளி கல்லூரிகளில் சேர சான்றிதழ் பெற வரும்போது அலைக்கழிக்கப்படுகின்றனர். விஏஓவிடம் ரூ. 3 ஆயிரம் தந்தாலே அனைத்து சான்றிதழும் வீட்டுக்கே வந்து விடும் என்று பேசப்படுகிறது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வட்டாட்சியரால் தரப்படும் சாதிச்சான்று 12ம் வகுப்பில் சேர ஏற்கப்படுவதில்லை. இருப்பிடமும், வருமானமும் மாறும் தன்மையுடையது. சாதி என்றும் மாறா தன்மையுடையது என்பது கூட தெரியாமல் ஊழல் செய்து பணம் சம்பாதிப்போர் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டோம் என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE