சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில், சேத்துப்பட்டில் இருந்து கீழ்ப்பாக்கம் நோக்கி சுரங்கப்பாதை பணி நடைபெறுகிறது. இதன் ஒருபகுதியாக, சேத்துப்பட்டு ஏரிக்கு கீழ் 18 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதை பணி சீரான வேகத்தில் நடைபெறுவதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் ஒரு வழித்தடம் மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான மூன்றாவது வழித்தடம் ஆகும். 45.4 கி.மீ. தொலைவு கொண்ட இந்த வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை மற்றும் பசுமை வழிச்சாலையில் சுரங்கப்பாதை பணிகள் அடுத்தடுத்து தொடங்கி நடைபெறுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, 2.8 கி.மீ. தொலைவில் சேத்துப்பட்டில் இருந்து நுங்கம்பாக்கம் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், சேத்துப்பட்டில் இருந்து கீழ்ப்பாக்கம் நோக்கி, சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த மார்ச்சில் தொடங்கியது. இந்தப்பணி தற்போது சீரான வேகத்தில் நடைபெற்று வருகிறது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சேத்துப்பட்டு வடக்கு - கீழ்ப்பாக்கம் நோக்கி சுரங்கப்பாதை பணி தொடங்கி சீரான வேகத்தில் நடைபெறுகிறது. இப்பணியை மேற்கொள்ள "தாமிரபரணி" என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம், ரயில்தண்டவாளத்தை கடந்து விட்டது.
» திருப்பூர் டவுன் ஹால் அரங்கம் திறப்பில் தாமதம் - காரணம் என்ன?
» பூந்தமல்லி அருகே மது போதையில் தகராறு செய்த கணவன் கொலை: மனைவி கைது
தொடர்ந்து, சேத்துப்பட்டு ஏரிக்கு கீழ் தரைமட்டத்தில் இருந்து 18 மீட்டர் கீழ் சுரங்கப்பாதை பணி நடைபெறுகிறது. மொத்தம் 674 மீட்டர் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். இதுவரை 100 மீட்டர் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு சுரங்கம் தோண்டும் இயந்திரம் தனது பணியை தொடங்கவில்லை.
சேத்துப்பட்டு வடக்கு - கீழ்ப்பாக்கம் வரை சுரங்கப்பாதை அமைப்பது மிகப்பெரிய சவால் நிறைந்தது. ரயில்வே தண்டவாளம் தவிர, படகு குளம், சேத்துப்பட்டு சுற்றுச்சூழல் பூங்கா ஆகியவற்றை சுரங்கம் தோண்டும் இயந்திரம் கடந்து செல்ல வேண்டியுள்ளது. இது மிகப்பெரிய சவாலாக இருக்கும். 4 மாதங்களில் இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.