அம்மாயி

By காமதேனு

பொ.பிரவீன்குமார்
praveenponniah@gmail.com

மருத்துவமனையில் சொல்லிவிட்டார்கள் - “எங்களால எவ்ளோ முடியுமோ முயற்சி பண்ணிப்பார்த்தோம். முடியல. மதுரைக்குக் கூட்டிட்டுப்போய் பார்க்கலாம். ஆனா எதுவும் நிச்சயம் கிடையாது. தூரத்துல இருந்து யாரும் வர வேண்டியது இருந்தா சொல்லிருங்க.” சொல்லியாகிவிட்டது. சென்னையிலிருந்து பெரிய பேத்தி வந்துகொண்டிருக்கிறாள். காலையில் வந்துவிடுவாள். அதுவரை உயிர் போகாமல் பிடித்து வைக்கலாமாம், ஆனால், மீட்டெடுக்க முடியாதாம். நகரின் தலைசிறந்த நரம்பியல் நிபுணர் சொல்லிச் சென்றார்.
யாரும் யாருக்கும் சொல்லாமலேயே ஆக வேண்டிய வேலைகள் மளமள வென்று நடந்தன. சத்தம் வராமல் குலுங்கி அழுத தெய்வு தாத்தாவுக்கு யார் ஆறுதல் சொல்ல முடியும், அவளைத் தவிர? முதல் காரியமாக, என் கையில் இரண்டு ஏடிஎம் அட்டைகளைக் கொடுத்து பணம் எடுக்க அனுப்பிவிட்டு, ஐசியு-விற்கு வெளியே கிடந்த நாற்காலியில் தன்னை இரண்டாய்க் குறுக்கி அமர்ந்துகொண்ட தெய்வு தாத்தாவின் கண்களில் பயம் கூடியிருந்தது.

சிலருக்கு வள்ளியம்மை. சிலருக்கு வள்ளியக்கா, சிலருக்கு ரயில் ஆச்சி. எங்களுக்கு ‘அம்மியா’. பெரிய பேத்திதான் ‘அம்மியாச்சி’ என்று முதலில் அழைக்கத் தொடங்கினாள். அம்மாச்சி என்று அழைக்க வேண்டியது, மருவி அம்மியாச்சி என்றானது. அடுத்தடுத்த பேரன்களும் பேத்திகளும் வந்து அதை இன்னும் சுருக்கி ‘அம்மியா’ என்றாக்கினோம். சிறு பிள்ளைகளுக்கு ரயிலாச்சி வீட்டிற்குச் செல்வதென்றால் அப்படி ஒரு கொண்டாட்டம். எந்த வீட்டுப் பிள்ளை என்றாலும் இடுப்பில் ஏற்றிக்கொண்டு சோற்றுக் கிண்ணத்துடன் மொட்டைமாடிக்குச் சென்றுவிடுவாள். அவளுக்குத் தெரியும் ரயில் வரும் நேரமும் பொழுதும். 

மொட்டைமாடியில் நின்று பார்த்தால் இருநூறு அடி தூரத்தில் திருநெல்வேலி - திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில் செல்வதைக் காண முடியும். கீழே இறங்கும்போது வெறும் கிண்ணம் மட்டும்தான் மிஞ்சும், சோறு காலியாகியிருக்கும். மருத்துவமனையில் இருந்த அந்தக் கடைசி மூன்று தினங்கள் தவிர்த்து பெரும்பாலும் அந்த ரயிலின் தாலாட்டில்தான் உறங்கியிருக்கிறாள் அம்மியா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE