‘கடனில் சிக்கியதால் பணமாகவே வழங்க வேண்டும்’ - ‘நியோ மேக்ஸ்’ முதலீட்டாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்

By என்.சன்னாசி

மதுரை: பிள்ளைகள் திருமணம், கடனில் சிக்கியதால் மனை இடமாக இன்றி பணமாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மதுரையில் நடந்த ‘நியோ மேக்ஸ்’ முதலீட்டாளர் நலச்சங்க கூட்டத்தில் பாதிக் கப்பட்டோர் வலியுறுத்தினர்.

மதுரையை மையமாகக் கொண்டு ‘நியோ-மேக்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் அதனுடைய துணை நிறுவனங்கள் செயல்பட்டன.

இவற்றில் முதலீடு செய்தவர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டோர் மதுரை பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீஸில் புகார் செய்தனர்.

அதன் பேரில், போலீஸார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களான கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், திருச்சி வீரசக்தி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந் நிலையில், 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டனர்.

மதுரையில் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு சிறப்பு டிஎஸ்பி மணிஷா தலைமையிலான தனிப்படையினர் இந் நிறுவனத்துக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்ததோடு, இவ்வழக்கில் தலைமறைவானோரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், இந்நிறுவனத்தில் முதலீடு செய்த பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.

இந்நிலையில், தேனி மாவட்ட ‘நியோ மேக்ஸ்’ முதலீட்டாளர் பாதுகாப்பு நலச் சங்கம் என்ற அமைப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது. பதிவு செய்யப்பட்ட இச்சங்கத்தில் ஒருங்கிணைந்த அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை ஏற்படுத்தி செயல்படுகின்றனர்.

இவர்கள் மூலம் பாதிக்கப்பட்டோருக்கு முதலீட்டுத் தொகையை மீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சங்கம் சார்பில், மதுரை பாண்டிகோவில் பகுதியில் முதலீட்டாளர் சந்திப்புக் கூட்டம் நேற்று நடந்தது.

மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் இருந்து 1,500-க்கும்மேற்பட்டோர் பங்கேற்றனர். சட்ட ஆலோசகர் அழகர்சாமி, நிர்வாகிகள் சங்கர், மணிகண்டன் உள்ளிட்டோர் முதலீட்டுப் பணத்தைத் திரும்பப் பெற்றுத் தருவது குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர்.

முதலீட்டாளர்கள்.

முதலீட்டாளர் பார்த்தசாரதி கூறிய தாவது: நான் இந்நிறுவனத்தில் ரூ. 9 லட்சம் வரை முதலீடு செய்துள்ளேன். முதிர்வுத் தொகை கிடைப்பதற்குள் நிறுவனத்துக்கு எதிரான பிரச்சினைகள் எழுந்தன. குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் முதல் அதிகபட்சம் ஒரு கோடி ரூபாய் வரை பலர் முதலீடு செய்துள்ளனர்.

ஏறத்தாழ 1.50 லட்சம் பேரிடம் ரூ.1500 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. ஒவ்வொருவரும் நண்பர் கள், நெருங்கிய உறவினர்கள் என்ற வகையில் நம்பி ஏமாந்து விட்டோம். அவர்களிடம் கேட்டால் நிறுவனம் வழக்கில் சிக்கியதால் எதுவும் செய்ய முடியாது என கை விரிக்கின்றனர்.

காவல்துறை, நீதிமன்றம், டிஆர்ஓ மற்றும் ‘நியோ மேக்ஸ்’ நிறுவன நிர்வாகிகள் மூலம் பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் பணமாகவோ, இடமாகவோ பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலீட்டுத் தொகையை மட்டுமாவது விரைவில் பெற்றுத்தர வேண்டும்.

நீதிமன்ற அறிவுரைப்படி, பொருளாதாரக் குற்றப் பிரிவில் புகார் அளிப்பது போன்ற செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானோர் இடம் வேண்டாம் என்று வலியுறுத்தினர்.

ஆகையால், கல்வி, பிள்ளைகள் திருமணம், மருத்துவச் செலவு, வீடு, நகை, அடமானத்தை மீட்பது ஆகியவற்றுக்காக பலர் கடனில் சிக்கி உள்ளதால் முதலீட்டுப் பணத்தையே வழங்க வேண்டும். அதிகாரிகள் தலையிட்டு பாதிக்கப்பட்ட பல ஆயிரம் பேருக்கு முதலீட்டுத் தொகை திரும்பக் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE