இரா.தங்கப்பாண்டியன்
thanga.pandi2007@gmail.com
தாத்தாவுடன் பிறந்தவர்கள் நான்கு பேர். இரண்டு ஆண்கள் இரண்டு பெண்கள். அப்பாவுக்குத் திருமணமாகும் முன்பே தாத்தாவின் ஒரு தம்பியும் ஒரு தங்கையும் இறந்துவிட்டார்கள். நான் சிறுவனாக இருந்தபோதே தாத்தா கண் பார்வையை இழந்திருந்தார். தாத்தாவின் இன்னொரு தங்கையான பொன்னம்மா பாட்டி, கணவர் இறந்தபிறகு எங்கள் வீட்டில்தான் இருந்தாள். அந்தப் பாட்டிக்கு வாரிசுகள் இல்லை. அதனால்தானோ என்னவோ என் மீது அவளுக்குக் கொள்ளைப் பிரியம். அவள்தான் என்னைக் கதைகளின் உலகுக்குக் கைப்பிடித்து அழைத்துச் சென்ற முதல் ஆசான்.
நான் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, விடுமுறை நாளில் தனது புகுந்த ஊரான நடுக்கோட்டை கிராமத்துக்கு என்னை அழைத்துச் சென்றாள்பாட்டி. ஆண்டிபட்டி பக்கம் வைகைநதியின் தென்கரையில் உள்ள அந்தக்கிராமத்துக்குச் சென்றதுதான் எனது முதல்வெளியூர்ப் பயணம். ஆண்டிபட்டியில்இறங்கி அங்கிருந்து நடுக்கோட்டைக்குச் சந்தை வண்டியில் பயணம் செய்தோம். பத்து நாட்கள் அங்கு தங்கியிருந்தோம். இரவில் சுடச் சுடக் கோழிக் குழம்பும், குழைந்த சோறும் அங்கு சாப்பிட்டதை மறக்கவே முடியாது.
சின்ன வயது முழுவதும் பொன்னம்மா பாட்டியுடன்தான் பொழுதுகள் கழிந்தன. இரவு, பகல் என்று எப்போது கேட்டாலும் கதைகள் சொல்ல அவள் தயங்கியதே இல்லை. ஏழு கன்னிமார்களின் கதை, மண்சட்டி பொன்சட்டியான கதை, அழகான பெண்களையெல்லாம் அந்தப்புரத்துக்குத் தூக்கிச் செல்லும் ராஜாவின் கதை, கண்டமனூர் ஜமீன் அழிந்த கதை எனச் சொல்லிக்கொண்டேயிருப்பாள். அவள் சொல்லும் கதைகளை மனதுக்குள் சித்திரமாக்கிக்கொண்டே கேட்டுக்கொண்டிருப்பேன். அவள் சொன்ன கதைகளில், ஏமாற்றப்பட்ட பெண்களின் கதைகளே அதிகம் இருந்ததை இப்போது உணர முடிகிறது.