கோவையில் தாயைப் பிரிந்து யானைக் கூட்டத்துடன் இணைந்த குட்டி யானை: வனத்துறை தொடர் கண்காணிப்பு

By ஆர்.ஆதித்தன்

கோவை: கோவையில் தாயைப் பிரிந்து சென்று யானை கூட்டத்துடன் இணைந்த குட்டி யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கோவை மருதமலை வனப்பகுதியில், கடந்த மே 30-ம் தேதி உடல்நலம் குன்றிய நிலையில் குட்டியுடன் பெண் யானை படுத்து கிடந்தது.

இதனிடையே வனத்துறையினர் மூலம் கால்நடை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து நான்கு நாட்களாக சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது பெண் யானை உடல் நலத்துடன் சுறுசுறுப்பாகவும் உணவருந்தி வருகிறது.

இந்நிலையில், மூன்று நாட்களாக தாயுடன் இருந்த 3 மாத ஆண் குட்டி யானை, ஜூன் 1-ம் தேதி தாயை விட்டு பிரிந்து மற்றொரு சகோதர இளம் ஆண் யானையுடன் வனப்பகுதிக்குள் சென்றது. இந்நிலையில், அந்த யானை வனப்பகுதியில் ஒரு யானை கூட்டத்துடன் இணைந்து இருப்பது கண்டிபிடிக்கப்பட்டது.

குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம் இரவு சுமார் 10.30 மணி அளவில் குட்டி யானை அடங்கிய யானை கூட்டம் (3 ஆண் யானைகள், 2 பெண் யானைகள், ஒரு ஐந்து வயது யானை மற்றும் ஒரு குட்டி) தாய் யானையை சந்தித்தது. மீண்டும் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு கூட்டத்துடன் குட்டி யானை சென்றது.

இதுகுறித்து, வனத்துறையினர் கூறும்போது, "தாய் யானையைப் பிரிந்து சென்ற குட்டி யானையின் நடமாட்டத்தை வனத்துறையின் 4 குழுக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE