ஈரோடு: கடம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால், பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால், கடம்பூர் - அணைக்கரை இடையிலான தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சத்தியமங்கலம், கடம்பூர், தாளவாடி, கோபி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 3,000 -க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன.
இப்பகுதியில் உள்ள குரும்பூர், அரிகியம் மொசல் மடுவு, குன்றி உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன் தினம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும் பள்ளங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கஞ்சன் பள்ளம் உள்ளிட்ட பல்வேறு ஓடைகளில் இருந்து வந்த மழை நீர், காட்டாற்று வெள்ளமாக உருவெடுத்து, அணைக்கரை பள்ளத்தில் கலந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் அணைக்கரை தரைப்பாலம் மூழ்கி, கடம்பூர் -அணைக்கரை இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெள்ள நீர் வடிந்த பின் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், ஓடைகளில் நீர் நிரம்பி வனப்பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
» திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு மாதத்தில் இதுவரை 11 பேர் டெங்குவால் பாதிப்பு
» கோவை: ரேஷன் கடைகளில் 2 வாரங்களாக பருப்பு, பாமாயில் விநியோகம் இல்லை