அச்சாரம்

By காமதேனு

சத்தியப்பிரியன்
satyamjayam09@gmail.com

சிவகாமிக்கு மேலத்தெருவில் ஒரே ஒரு ஓட்டு வீடு மட்டும் சொந்தம். நீளமான வீடு. தீப்பெட்டி போல சின்னஞ்சிறு அறைகள். வீட்டின் இறுதியில் சமையல் கட்டிலும் மாட்டுக் கொட்டிலும் உண்டு. இவளது புழக்கம் சமையல் கட்டோடு சரி. கணவன் கோமதிநாயகம் இருந்தவரைக்கும் நாலு பசு மாடு, இரண்டு எருது என்று வாழ்க்கை அதுபாட்டுக்கு ஓடிக்கொண்டுதான் இருந்தது. அவன் அற்பாயுசில் போன பின்னர், சிவகாமி வாழ்க்கை எனும் புதிர்ப் பாதையின் வாயிலில் எட்டு வயது மகள் பூங்கோதையுடன் தவித்து நின்றாள்.
அப்போது சிவகாமிக்கு வயது முப்பத்திரண்டுதான். பட்டணத்தில் பெண்கள் முப்பது வயதிற்கு மேல்தான் திருமணத்துக்கே தயாராகிறார்கள். இங்கே கிராமத்தில் அப்படியா? கோமதிநாயகம் போன பின்னர் சிரமங்கள் வரிசைகட்டி வந்தன. தட்டுமுட்டு சாமான்களையும் இரண்டு எருதுகளையும் பைசல் பண்ணியதன் மூலம் கொஞ்சம் பணம் கிடைத்தது. அடுத்து என்ன செய்வது என்று தவித்து நின்றபோது கீழத் தெரு சுப்பையா பிள்ளைதான் கடவுள்போல் வந்து நின்றார். இரண்டு பசு மாடுகளை வாங்கிக்கொண்டு வள்ளிசாக இருபதாயிரம் ரூபாய் கொடுத்தார். மீதம் இருக்கும் இரண்டு பசுக்கள் சிவகாமியின் ஜீவனத்தை ஓட்ட போதும்.
காலை நேரங்களில் செண்பகவல்லியம்மன் கோயில் வாசலைச் சுத்தம் செய்து வண்ணக் கோலம் போட்டு, பசு மாட்டுக் காம்பில் பால் கறந்து, வாடிக்கை வீடுகளுக்குப் பால் கொடுப்பாள் சிவகாமி. அதை வைத்து ஏதோ தனக்கும் பூங்கோதைக்கும் பொங்கிப் போட்டுப் பொழுதை ஓட்டிக்கொண்டிருந்தாள். மாடுகளைக் கொட்டிலில் கட்டாமல் புழக்கடையில் தோட்டத்தில் கட்டிவைத்தாள்.
செண்பகவல்லியம்மன் சக்திவாய்ந்தவள். வடிவான அம்மன். உட்கார்ந்துதான் இருப்பாள். வெறும் தகரக் குடிசையின் கீழ் இருந்த அம்மனுக்குக் கட்டிடம்கட்டி கும்பக்கலசம் வைத்தது வாசுதேவ ஐயரும் அவர் மனைவி ஆனந்தவல்லியும்தான். வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் கோயில் விசேஷத்துடன் மிளிரும். ஊர் மக்கள் பயபக்தியுடன் வந்து நிற்பார்கள். சிவகாமியும் இரண்டு லிட்டர் பசும்பாலை அபிஷேகத்துக்கும் பொங்கல் வைக்கவும் இனாமாகக் கொடுப்பாள். பூத்தொடுப்பது, எலுமிச்சை மாலை கோப்பது போன்ற சின்னச் சின்ன உபகாரங்களைச் செய்துகொடுப்பதால் ஆனந்தவல்லி மாமிக்கு இவளிடம் கொள்ளைப் பிரியம்.
கோயிலுக்கு வரி பிரிப்பது, வருடாவருடம் தை மாதம் விழாவுக்கு ஏற்பாடுசெய்வது, வெள்ளையடிப்பது போன்ற எல்லா வேலைகளையும் சுப்பையா பிள்ளையே செய்துவிடுவார். மிலிட்டரியில் பதினெட்டு வருடம் பணிபுரிந்தவர். காஷ்மீர் எல்லையில் இருந்தவர், குளிரும் பனியும் ஒத்துக்கொள்ளாமல் ஊருக்குத் திரும்பிவிட்டார். வயது நாற்பதைத் தாண்டிவிட்டாலும் ராணுவ மிடுக்கு குறையவே இல்லை. நேர்க்கோடு போல் நிமிர்ந்துதான் நடப்பார். மனைவியை இழந்தவர். பத்து வருடங்களுக்கு முன்னர் தீ விபத்தில் மனைவி மலர்க்கொடி இறந்தபோது, அவர் கதறியழுதது ஊரையே கண்கலங்க வைத்தது. ஒரு வெள்ளிக்கிழமை விளக்கேற்ற கையில் விளக்கோடு திரும்பியவள், பாலியஸ்டர் புடவைத் தலைப்பில் குத்து விளக்குச் சுடர் நெருப்பு பற்ற ஐந்தே நிமிடங்களில் சொக்கப்பனையாக எரிந்து மரித்துப்போனதை நினைக்க நினைக்க அவர் மனம் துடிதுடிக்கும்.

ஒண்டிக்கட்டை என்பதால் சுப்பையா பிள்ளையிடம் ஊர்க்காரர்கள் ஏகப்பட்டவேலைகளை  வாங்கினார்கள். அவரும்  சலிக்காமல்  செய்வார். வேலையில்  மூழ்கும்போது எல்லாவற்றையும்  மறக்க  முடியுமே,  சிறிது நேரம்தான்  என்றாலும். மிலிட்டரிக்
காரராக இருந்தாலும் தனக்கு வரும் கோட்டா சரக்கில் ஒரு சொட்டைக்கூட சுவைக்க மாட்டார். ஊர் இளந்தாரிகள் கேட்டால் கொடுத்துவிடுவார்.

எல்லாவற்றுக்கும் மேல் மரியாதைக்குரிய மனிதர். சிவகாமி குளிக்க ஆற்றுக்குச் செல்லும் சமயங்களில் மேலத் தெரு பங்கஜமும் பாய் முடையும் பீர் முகம்மது ராவுத்தரும் மட்டும்தான் குளிக்க வருவார்கள். சுப்பையா பிள்ளை இவள் கரையேறும்போது கண் பார்க்கும் தொலைவில் வருவார். பாதுகாப்பாக இருப்பதாக மனசு சொல்லும். நிம்மதியாகக் கரை ஏறுவாள்.
சிவகாமிக்கு அவ்வப்போது மனசும் உடம்பும் முறுக்கி நெட்டித்தள்ளும். வயசு இன்னும் போய்விடவில்லை. உள்ளுக்குள் உணர்வுகள் பொங்கித் ததும்பும் இரவுகளில் செய்வதறியாமல், அம்மனை வேண்டிக்கொண்டு தூங்காமலேயே தவித்திருக்கிறாள். ஊர்க்காரர்களில் ஓரிருவரைத் தவிர எல்லோருமே கண்ணியமானவர்கள்தான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE