எங்கிருந்தோ வந்தான்...

By காமதேனு

எம்.பாஸ்கர்
devakithirumagan@gmail.com

ஐசியு வார்டின் படுக்கையில் படுத்திருந்த அப்பாவை, வார்டுக்கு வெளியே சிறு கண்ணாடித் துவாரத்தின் வழியே பார்த்துக்கொண்டிருந்த அந்த நிமிடங்களை எப்போதும் மறக்க முடியாது. அத்தனை அன்பான, நட்பார்ந்த அப்பாவை அந்த நிலைமையில் பார்க்க நேர்ந்த கொடுமையை எங்களால் தாங்க முடியவில்லை. செய்வதறியாது பார்த்துக் கொண்டிருந்தோம் நானும் தங்கையும். அழுது களைத்திருந்த அம்மாவைத் தன் தோளில் தாங்கி ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள் என் மனைவி.
அரசுப் பணியிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வுபெற்றுவிட்ட அப்பா முன்னைப்போலவே ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும்தான் இருந்தார்.

அதிகாலையில் எழுந்து நடைப்பயிற்சி, குளித்து முடித்ததும் செய்தித்தாள் வாசிப்பு என்றே அவரது அன்றாடம் இருந்தது. அப்படியான ஒரு காலைப் பொழுதின் ஒரு நொடியில், நாற்காலியில் அமர்ந்தபடி திடீரென மயங்கிச் சரிந்தவர் மூச்சுபேச்சில்லாமல் போனார். ஒருபக்கம் கை, கால்கள் செயலிழந்து வாயும் கோணிக்கொண்டது. பதறிப்போன நாங்கள் புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனையில் சேர்த்தோம்.

அப்பாவுக்கு பி.பி. ஷுகர் எதுவும் இருந்ததில்லை என்றே நினைத்திருந்தோம். ஆனால், ‘பி.பி இருந்திருக்கிறது, கவனிக்காமல் விட்டதால் அது உச்சநிலைக்குச் சென்று இடது மூளையில் ரத்தம் கட்டிக்கொண்டுவிட்டது. வயது மூப்பினால், அதி தீவிர சிகிச்சைக்கு உடல் எந்த அளவுக்கு ஒத்துழைக்கும் என்று சொல்ல முடியாது. அப்படி ஒத்துழைக்கும் பட்சத்தில், அவரது உயிர் காப்பாற்றப்படலாம்; கை, கால்களும் மறுபடி செயல்படக்கூடும்; ஆனால், அதற்கெல்லாம் உத்தரவாதம் எதுவுமில்லை’ என்றது மருத்துவமனை நிர்வாகம்
மூட்டு வலிதான் அவருக்கிருந்த ஒரே பிரச்சினை. அச்சிறுபாக்கத்தில் யாரோ ஒரு மருத்துவர் பிரத்யேகமாக ஊசி போடுவதாகவும், அதன் மூலம் புதிய தசைநார்கள் உருவாகி மூட்டுவலி குறையுமென்று யாரோ சொன்னதை நம்பி ஆயிரக்கணக்கில் செலவு செய்துவந்தார். நாங்களும் மறுப்பேதும் சொல்லாமல் அவருடைய திருப்திக்கு விட்டுவிட்டோம். ஆனால், அதற்குப் பின்னர் தொடர்ந்தாற்போல் அடிக்கடி காய்ச்சல் வந்து அவதிப்பட்டும், நேரங்கெட்ட நேரத்தில் தூங்கிக்கொண்டும் இருந்ததைக் கவனித்திருக்கிறேன். கேட்டால், “மருந்து வேலை செய்யுதுப்பா, கொஞ்ச நாளில் சரியாயிடும்” என்று சொல்லிக்கொண்டிருந்தார். கண்மூடித்தனமான மருந்தும், ஊசியும் இன்றைக்கு இந்த அளவுக்கு அவரை உருக்குலைய வைத்துவிட்டன. நினைக்கவே ஆற்றாமையாக இருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE