கோவை: கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த பெரோஸ்கான், பெங்களூருவில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது வீடு குனியமுத்தூர் அர்ச்சனா நகரில் உள்ளது. இவர் செல்போன் டீலராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில், பெரோஸ்கான் முறையாக வருமான வரி செலுத்த வில்லை என்று எழுந்த புகார்களின் அடிப்படையில், பெங்களூருவில் அவரது ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, குனியமுத்தூரில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது. பிற்பகல் ஒரு மணிக்குத் தொடங்கிய சோதனை,மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
இதில், கணக்கில் வராத ரூ.4.10 கோடி இருப்பது தெரியவந்தது. மேலும், ஒரு துப்பாக்கியும் இருந்துள்ளது. இதுகுறித்து வருமான வரித் துறையினர் மாநகர போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் சோதனை நடத்தியதில், அந்த துப்பாக்கி 'ஏர்கன்' வகையைச் சேர்ந்தது என தெரிய வந்தது.
தொடர்ந்து, கணக்கில் வராத ரூ.4.10 கோடி ரொக்கம், ஏர்கன் துப்பாக்கி, ஆவணங்கள், கணினி தொடர்பான பொருட்கள் உள்ளிட்டவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
» வெப்ப அலையால் 87 பேர் உயிரிழப்பு
» இண்டியா கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெறும்: டெல்லியில் நடைபெற்ற கூட்டத்துக்கு பிறகு கார்கே தகவல்