மதுரை: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் நடப்பாண்டு மதுரை மாவட்டத்திலுள்ள விவசாய நிலங்களில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்ட தொடக்க விழாவில் பங்கேற்று அமைச்சர் பி.மூர்த்தி மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
சுற்றுச்சூழலுடன் விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் மரம் சார்ந்த விவசாய முறையை ஊக்குவிக்கும் பணியில் ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் களப்பணியாற்றி வருகிறது. தமிழகத்தில் நடப்பாண்டில் 1.21 கோடி மரங்கள் விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயித்துள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டந்தோறும் தொடக்க விழாக்கள் நடந்து வருகின்றன.
அதனையொட்டி சனிக்கிழமை அன்று மதுரை அழகர்கோவிலில் உள்ள மகாத்மா காந்தி மாண்டிசோரி பள்ளியில் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு அமைச்சர் பி.மூர்த்தி தலைமை வகித்து முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார். சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன், மகாத்மா மாண்டிசோரி பள்ளி நிர்வாகிகள் கார்த்திக், ஹம்ச பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈஷா தன்னார்வலர் சுவாமி அகம்பிதா வரவேற்றார்.
இவ்விழாவில் அமைச்சர் பி.மூர்த்தி விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி பேசுகையில், விவசாயிகள் பலன் தரும் பணப்பயிர் எதுவென அறிந்து நட்டு வளர்த்தால் அது பயிர் விவசாயத்தை விட பல மடங்கு வருவாய் தரும். இங்கு வழங்கப்படும் மரக்கன்றுகளை வளர்த்தால் வருவாய் பெருமளவில் உயரும். வருவாயோடு சுற்றுச்சூழலும் முக்கியம் என்பதால் வீடுகளில், முடிந்த இடங்களில் எல்லாம் நட்டு வைக்கலாம். இது எளிதாக இருந்தாலும், மக்களுக்கு பயனுள்ள நிகழ்வாகும். காலச்சூழல், நாட்டின் எதிர்காலத்தை மனதில் வைத்து நடத்தப்படும் இந்நிகழ்வு வெற்றிகரமாக அமையும், என்றார்.
» விளையாட்டு மைதானத்தை மீட்டு தர காவல் நிலையத்தில் சிறுவர், சிறுமியர் முறையீடு @ புதுச்சேரி
» ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள் வாங்கித் தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி
இதில் விவசாயிகள், மாணவர்கள், ஈஷா தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். மேலும், மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மற்றும் களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், கடந்தாண்டு தமிழகத்தில் ஒரு கோடியே 10 லட்சம் மரக்கன்றுகள், மதுரை மாவட்டத்தில் மட்டும் 4,78,543 மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டது.