கள்ளக்குறிச்சியில் வாய்க்காலை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட விநாயகர் கோயில் இடிப்பு

By ந.முருகவேல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிசி நகரப் பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள கட்டிடங்கள் நடுவே கட்டப்பட்டிருந்த விநாயகர் கோயில் இடித்து அகற்றப்பட்டது.

கள்ளக்குறிச்சி நகராட்சிப்பகுதியில் பேருந்து நிலையத்திற்கு எதிர்புறம் கச்சிராயப்பாளையம் செல்லும் காந்தி சாலையில் ஓடையை ஆக்கிரமித்து 80 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்ட கட்டிடங்களை வருவாய் துறையினர் நீதிமன்ற உத்தரவுப்படி அளவிட்டு வருகின்றனர். சிலர் வருவாய் துறையினர் அளவீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், வருவாய் துறையினர் காவல் துறையினர் பாதுகாப்போடு அளவீடு செய்து வருகின்றனர்.

இதையடுத்து கட்டிட உரிமையாளர்கள் தாங்களாகவே இடிக்கத் துவங்கியுள்ளனர். வணிகக் கட்டிடங்கள் ஒவ்வொன்றாக உரிமையாளர்களே இடித்து அகற்றிவரும் நிலையில், ஆக்கிரமிப்புக் கட்டிடங்களுக்கு நடுவே இருந்த, விநாயகர் கோயிலையும் அகற்றிக்கொள்ள கோயில் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து கோயிலில் உள்ள சிலைகள் தனித்தனியாக பெயர்த்தெடுத்து வாகனங்களில் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தினர் கோயில் சுற்றுச்சுவர் மற்றும் கோபுரங்களை இடித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE