அடுத்து நான் எழுதப் போறது... களப்போராளி கவிஞனின் கனவு!

By காமதேனு

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

கற்பனையில் கவிதை வடிப்பவர்களை விடவும், வாழ்க்கை அனுபவங்களை வார்த்தைகளில் செதுக்குபவர்களின் படைப்புகளுக்கு வீச்சு அதிகம். கண்மணி ராசா இரண்டாவது ரகம். இவரைப் பற்றிச் சொல்வதென்றால், கடின உழைப்பாளி, நல்ல படைப்பாளி, களப்போராளி என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

ராஜபாளையத்தில் மாட்டுவண்டித் தொழிலாளியின் மகனாகப் பிறந்து, மில் தொழிலாளியாக சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் இவர், தனது ஒரே கவிதையின் மூலம் இலக்கிய உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தவர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில செயலாளர்களில் ஒருவர். இரண்டு கவிதை நூல்கள், பல சிறுகதைகளை எழுதிய படைப்பாளி.

“என்னோட இயற்பெயர் அய்யனார் செல்வம். அப்பா தட்சிணாமூர்த்தி மாட்டுவண்டி அடிச்சிட்டு இருந்தார். நான் 12-ம் வகுப்பு படிச்சிட்டு இருக்கும்போது அப்பா இறந்துட்டார். அதனால 19 வயதிலேயே எனக்குக் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. குடும்ப பாரம் தலையில ஏறிடிச்சு.

வக்கீலாகணுங்கிற என்னோட கனவைக் கைவிட்டு விட்டு, மில் வேலையில சேர்ந்தேன். ஒரு வாரம் காலை ஷிஃப்ட், மறு வாரம் மதிய ஷிஃப்ட், அடுத்து இரவு ஷிஃப்ட்ன்னு 24 வருசம் ஓடிருச்சி" என்று தனது இயல்பு வாழ்க்கையை விவரிக்கிறார் கண்மணி ராசா.
முதல் கவிதையை 9-ம் வகுப்பு படிக்கும்போது எழுதியிருக்கிறார். ஆசிரியர்  தந்த ஊக்கம் இவரை முழுமையாக எழுத்தின் பக்கம் திசை திருப்பியது. குடும்பச் சூழலின் காரணமாகப் படிப்பு திடீரெனத் தடைபட்டதால் விரக்தியின் விளிம்பில் நின்றவர், அந்தச் சோகங்களையே கவிதைகளாய் எழுதத் தொடங்கினார்.

அதில்,

‘சாணிப்பால் முற்றத்தில்
நிலாக்காயும் இரவொளியில்
உன்னோடு கவிதை பேச ஆசை.
ஆனால்...
பகலெல்லாம் பஞ்சாலையில்
பறந்த களைப்பில் நானும்
தீப்பெட்டி ஆபீசில்
தீயாய் எரிந்த களைப்பில் நீயும்
கண்ணயர்ந்து உறங்குகையில்
கவிதையாவது...
கழுதையாவது...’


என்ற கவிதை பலரது கவனத்தை ஈர்த்து, இவருக்குப் புகழ் வெளிச்சத்தையும் பாய்ச்சியது. அதுவரையில் எழுதிய கவிதைகளில் முக்கியமானவற்றை எல்லாம் தொகுத்து, ‘கவிதையாவது கழுதையாவது’ எனும் தலைப்பில் 2008-ல் புத்தகமாக வெளியிட்டார் கண்மணி ராசா. பிறகு, குழந்தைகள் குறித்த தனது கவிதைகளைத் தொகுத்து ‘லட்சுமி குட்டி’ என்ற தலைப்பில் 2012-ல் அடுத்த நூலை வெளியிட்டார். அதில்,

‘மணிகண்டன் வீட்டுக்கு
மணீஸ் இல்லம்
ஐஸ்வர்யா வீட்டுக்கு
ஐஸ் இல்லம்...
கல்யாணம் வீட்டுக்கு
கல்யாண் பவன்..
நம்ம வீட்டுக்கு
ஏன்பா என் பெயரில்லை...
கேட்கிறாள் லட்சுமிகுட்டி
அடுத்த முறை
வீடு தேடும்போது
அவள் பெயருள்ள
வீடாகத் தேட வேண்டும்’


என்று வாழ்க்கையின் யதார்த்தத்தைப் பேசிய கவிதை பலரது பாராட்டைப் பெற்றது.

``வார விடுமுறை நாட்கள்ல அதிகமாக கவிதையே வாசிப்பேன். பிடித்த கவிஞர் அறிவுமதி. ‘களம்’ எனும் சிறுபத்திரிகையில் நான் எழுதிய ‘நெல்லுச்சோறு’ என்ற சிறுகதை கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனது சில கவிதைகளையும் பெங்களூரு பேராசிரியை மலர்விழி கன்னடத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்'' என்கிறார் ராசா.

“அடுத்து என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டால், “பஞ்சாலைத் தொழிலாளர்களோட வாழ்க்கையைப் பத்தி தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய ‘பஞ்சும் பசியும்’ நாவல் 1950-கள்ல பெரிய அளவுல பேசப்பட்டுச்சு. அதுக்குப் பிறகு பஞ்சாலைத் தொழிலாளர்களைப் பத்தி விரிவான பதிவுகள் இல்ல. பஞ்சு மில்லில் இத்தனை வருஷம் வேலை பார்த்த அனுபவம், வாழ்க்கை அனுபவத்தோட பின்னணியில ஒரு நாவல் எழுதத் திட்டமிட்டிருக்கேன். இன்றைய சூழல்ல பஞ்சாலைகள் இயங்குற விதம், அதோட வீழ்ச்சிக்கான காரணங்களை விரிவா பேசும் நாவலா அது இருக்கும்" என்கிறார் கண்மணி ராசா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE