உத்ரா
uthraperumal@gmail.com
"ஆண்டவன் அன்னைக்கு எழுதுன எழுத்தை மாத்த முடியுமா?”ன்னு எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. அத மாதிரி... விதி யார விட்டுது சொல்லுங்க. சிலருக்கு சில விஷயங்கள கண்ணால பார்த்தாலே கசக்கும். புளியோதரைன்னா எனக்கும் அப்படித்தான். என்னைப் பழிவாங்கணும்னு நெனச்சா, அன்னைக்கு எங்க வீட்டுல புளியோதரைய போட்டுத் தாளிச்சுருவாங்க. அன்னைக்கிப் பூரா வீட்டுக்குள்ள எனக்கும் அவளுக்கும் ஒரே ரதபுதம்தான்!
அப்படித்தான் அன்னைக்கு அம்மனும் எங்க வீட்டு அம்மனும் கூட்டு சேர்ந்து நம்மள பழிவாங்கிட்டாங்க. எங்கம்மா வீட்டுக்குப் பக்கத்துலேயே அம்மன் கோயில் ஒண்ணு இருக்கு. சக்தியான அம்மன்னு சொல்லுவாங்க. நான் வெள்ளிக்கிழமை பொறந்த பய. வெள்ளிக்கிழமையில அரசு பொறந்தா பெத்த தாய்க்கு எடக்கு மடக்கு பண்ணும்னு யாரோ சொல்லிவிட்டுருக்காங்க.
அதனால, என்னைய அந்த அம்மனுக்குத் தத்துக் குடுத்துட்டாங்க. எனக்கு கல்யாணம் பேசுனப்ப, ஒரு தென்னம்புள்ளைய அம்மனுக்குக் குடுத்துட்டு அதுக்குப் பதிலா என்னைய அம்மன்கிட்டருந்து தத்து எடுத்துட்டு வந்து இன்னொரு ஆத்தாக்கிட்ட (வீட்டம்மாதான்!) பொறுப்பா ஒப்படைச்சிருக்காங்க.
சரி, அந்த சோகத்த(!) விடுங்க. எனக்கு வெவரம் தெரிஞ்சா நாளா அந்தக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடக்கல. திடீர்னு ஒருநாளு கும்பாபிஷேகம் வருதுன்னு சொன்னாங்க. நம்ம சுவீகாரம் போன இடமாச்சேன்னு ரொம்ப ஆர்வமாகிட்டேன். கும்பாபிஷேகத்தன்னைக்கி காலையிலயே சீக்கிரமா எந்திரிச்சு குளிச்சுட்டு, என்னோட வீட்டம்மாவையும் எழுப்பி குளிக்கச் சொன்னேன்.
“நம்ம தெருவுல இருக்குற கோயில்... கும்பாபிஷேகம் பார்க்காம இருக்கக் கூடாதும்மா”ன்னு அவளுக்கு நீளமா ஒரு லெக்சர் குடுத்தேன் (ஊருக்கெல்லாம் பாடம் எடுக்குறோம்... வீட்டுக்குள்ள ஒரு சந்தர்ப்பம் கெடைக்கிறப்ப சும்மா விடலாமா?) ஆனா அவ, ஒரே வார்த்தையில என்னைய காலி பண்ணிட்டா. ‘‘இந்தா இருக்கிற கோயில் என்ன ஓடியா போகப்போகுது... கும்பாபிஷேகம் முடிஞ்சாலும் 48 நாளைக்கு பவர் இருக்கு. இன்னைக்கி எதிர்வீட்டுக்காரங்க கல்யாணம் இருக்கு; நான் அங்க போகணும்.”
“இல்லப்பா... அது போகலாம் தனியா. மண்டகப்படிகூட செய்யலாம். கும்பாபிஷேகத் தன்னைக்கு கும்பத்துல ஊத்துற தண்ணி நம்ம தலையில விழுந்தா நல்லதும்பாங்க. அதான் சொல்றேன்”னு நான் சொன்னதுக்கு, “வெயிலுக்கு முன்னாடி கல்யாணத்துக்குப் போகணும். கும்பாபிஷேகத்துல லேட் ஆயிட்டா என்னால கல்யாணத்துக்குப் போக முடியாது”ன்னு வாதம் பண்ணிக்கிட்டே இருந்தா. சரி, போகட்டும்னு நான் மட்டும் கோயிலுக்குக் கெளம்பிட்டேன்.
அங்க என்னோட ஃப்ரெண்ட்ஸ் பல பேர பார்த்தேன். அதுல கோபாலும் ஒருத்தர். நாங்க ரெண்டு பேரும் கும்பாபிஷேகம் முடிஞ்சதும் ஒரு ஓரமா நின்னு பேசிட்டு இருந்தோம். எதுத்தாப்புல புளியோதரைக்கு வரிசை கட்ட ஆரம்பிச்சுது கூட்டம். கோபாலோட பையன் வேகமா ஓடிப்போயி ஒரு பிளேட்ல புளியோதரைய வாங்கிட்டு வந்தான். “அப்பா... இத வெச்சுக்குங்க”ன்னு சொல்லி கோபாலுக்கிட்ட குடுத்துட்டு மறுபடியும் ஓடிப்போய் இன்னொரு தட்டு புளியோதரையோட வந்தான். “இதையும் வெச்சுக்குங்கப்பா”ன்னு சொல்லிட்டு மறுபடியும் ஓடுனான். “எங்கடா போறே..?”ன்னு கோபாலு கத்துனாரு. அதுக்கு அந்தப் பொடியன், “நம்ம ரெண்டு பேருக்கும் வாங்கியாச்சு. அம்மாவுக்கு ஒரு பிளேட் வாங்க வேண்டாமா?”ன்னான்.
உடனே கோபால் என்னைய ஒரு தடவ பார்த்துட்டு, “பிரசாதம்தானடா... ஒரு பிளேட் வாங்குனா பத்தாதா, எதுக்கு இத்தன?”ன்னு கவுரமா சொன்னார். அதுக்கு, ”ஏம்பா... நீதான சொன்னே... ‘இன்னைக்கு அம்மா சமைக்காது... புளியோதரைய வெச்சுத்தான் பொழப்ப ஓட்டிக்கணும்’னு” கோபாலின் கவுரவத்தை தெருவுல போட்டு உடைச்சான் அந்தப் புள்ள. அதக் கேட்டு நான் சத்தமா சிரிச்சிட்டேன். கோபாலுக்கு முகம் ஒரு மாதிரியாகிருச்சு. “சரி, விடு கோபாலு...”ன்னு அவரை சகஜ நிலைக்குத் திருப்பிட்டு வீட்டுக்குக் கெளம்பலாம்னு நினைக்கையில எங்க அம்மா கூப்டாங்க.
போனேன். “இந்தாப்பா ஒரு வாய் புளியோதரை சாப்பிட்டுப் போ”ன்னாங்க. அவங்க சொன்னதுக்காக என் பிரியமான(!?) புளியோதரையைக் கொஞ்சூண்டு அள்ளி வாயில போட்டுட்டு எஸ்கேப் ஆகிட்டேன். வீட்டுக்கு வந்தா... கல்யாணத்துக்குப் போயிட்டு வந்த களைப்புல வீட்டம்மா ஹாயா படுத்துத் தூங்கிட்டு இருந்தா. என்னோட மக மட்டும் தனியா உக்காந்து படிச்சுட்டு இருந்தா.
பசி வயித்தக் கிள்ளுச்சு. அவளை எழுப்பலாம்னு ரூமுக்குள்ள போனேன். ”அப்பா அப்பா... அம்மாவ எழுப்பாதீங்க...”ன்னு பதறி ஓடி வந்த எம் பொண்ணு, “கல்யாணத்துக்குப் போயிட்டு கோயிலுக்கும் போயிட்டு வந்த அம்மா டயர்டா இருக்குன்னு சொல்லித்தான் படுத்துருக்காங்க”னா.
“சரிம்மா... எனக்குப் பசிக்குதே. சாப்ட என்ன இருக்கு?”ன்னேன். “அம்மா கல்யாண வீட்லயே சாப்பிட்டாங்களாம். உங்களுக்குக் கோயில்ல கொடுத்த புளியோதரை வச்சிருக்காங்க. தொட்டுக்கறதுக்கு வேணா வத்தல் வறுத்து வச்சிருக்காங்க. சாப்பிட்டுக்கச் சொன்னாங்க”னு சொன்னா மக.
அப்பயே எனக்குப் பாதி பசி அடங்கிருச்சு. இருந்தாலும் டைனிங் டேபிள் பக்கம் எட்டிப் பார்த்தேன். அங்க ஆமையோட முதுகாட்டம் அசையாம கெடந்துச்சு புளியோதரை. கோபாலு தூரத்துல நின்னு என்னைய பார்த்து சிரிக்கிற மாதிரியே இருந்துச்சு!