கே.கே.மகேஷ்
உச்சக்கட்ட ஃபீவரில் இருக்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். இதோ ஐபிஎல் லீக் போட்டிகள் முடிவடைந்து, வரும் 12-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக வருகிற மே 30-ம் தேதி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளும் தொடங்குகின்றன.
இந்த நேரத்தில் கிரிக்கெட் வெறியர் ஒருவரை குடும்பத்தோடு சந்தித்தால் எப்படியிருக்கும் என்ற திட்டத்துடன் மதுரை மாகாளிபட்டியில் உள்ள அரவிந்த்குமார் வீட்டுக்குச் சென்றோம். சமீபத்தில் சென்னை சேப்பாக்கத்தில் 12 அடி இரும்புத் தடுப்பில் ஏறி, மைதானத்திற்குள் குதித்து சிராய்ப்பு காயத்தோடு டோனியை விரட்டிச் சென்று கை குலுக்கினாரே, அதே அரவிந்த்குமார்தான்.
"வெறும் கிரிக்கெட் ரசிகனா இருந்த நான் டோனி வெறியனா மாறுனது 2007 வேர்ல்டு கப் கிரிக்கெட் சமயத்துலதான் ப்ரோ. 8 வருஷமா என் பர்த்டேய கூட கொண்டாட மாட்டேன். டோனி பர்த்டேக்குத்தான் வீட்ல கேக் வெட்டுவேன், பசங்களுக்கு ட்ரீட் கொடுப்பேன். மிஸ்டர் கூல் ப்ரோ அவரு. செம எனர்ஜியான பிளேயர். தலைமைப் பண்புல அவரை மிஞ்சுன ஆள் கிடையாது. அப்பவே அவரை மீட் பண்ணணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, மதுரையிலதான் கிரிக்கெட் மைதானமே கிடையாதே... இந்த நேரத்துலதான் சென்னையில ஒரு பயிற்சி ஆட்டம் இருக்குதுன்னும், அதைப் பார்க்க ரசிகர்களை அனுமதிக்கிறாங்கன்னும் கேள்விப்பட்டேன்.