எஸ்.எஸ்.லெனின்
அண்மையில் லண்டனில் கைது செய்யப்பட்டிருக்கும் விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே, ஸ்வீடன் வாயிலாக அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவார் என்ற செய்தி ஊடக உலகை உலுக்கி வருகிறது.
காரணம், அசாஞ்சேவுக்கு எதிராக மரணதண்டனை அல்லது ஆயுட்கால சிறைவாசத்துக்கான கிரிமினல் குற்றச்சாட்டுகளுடன் அமெரிக்கா காத்திருக்கிறது. 14 ஆண்டுகளாக உலக நாடுகளைக் கலங்கடித்த அசாஞ்சே புயலை இந்தக் கைது விவகாரம் சிறு அலையாகக் கடந்து செல்லுமா அல்லது முழுவதுமாக முடக்கிப் போடுமா என்பது வரும் வாரங்களில் தெளிவாகி விடும்.
ஆஸ்திரேலியாவில் பிறந்த ஜூலியன் அசாஞ்சேவுக்குத் தனது தந்தையைப் போலவே போர்களுக்கு எதிரான நிலைப்பாடும், தகவல் வெளிப்படைத் தன்மை மீது தளராத பிடிப்பும் உண்டு. அதன் போக்கில் ஆர்வமாகி 16 வயதிலேயே தனது ஹேக்கிங் திருவிளையாடலைத் தொடங்கிய அசாஞ்சே, தனது 23 வயதில் முப்பதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் இணையதளங்களை ஊடுருவியதால் ஆஸ்திரேலிய போலீஸாரின் விசாரணை வளையத்துக்குள் வந்தார். அடிப்படையில் பத்திரிக்கையாளர் மற்றும் கம்ப்யூட்டர் விற்பன்னர் முகங்களைக் கொண்ட அசாஞ்சே, இரண்டையும் கலவையாக்கி 1999-ல், ‘லீக்ஸ்’ என்ற பெயரில் இணையதளம் தொடங்கினார். ஆனால், பெரிய அளவிலான தொடர்புகள் இல்லாததால் அசாஞ்சேவால் அடுத்த கட்டத்திற்கு நகர முடியவில்லை.