சின்னப் பளளிக்கூடம் இப்போது இல்லை- புலியூர் முருகேசன்

By காமதேனு

சோழன் சிலைக்கு முன்புறமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளை என்னுடன் வந்த நண்பர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். நெரிசல் குறைவாக இருந்தது அந்தச் சாலை. என் எதிரே வரும் நபரைப் பார்த்ததுமே அடையாளம் கண்டுகொண்டேன். அருகில் வந்ததும் “பாலசுந்தரம்” என மகிழ்ச்சியுடன் கூப்பிட அந்த முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. “என்னைய தெரியலையாடா?” என உரிமையுடன் கேட்டதும் தெரிகிறது என்பதாகத் தலையசைத்தான் பாலசுந்தரம். என் அளவிற்கு இல்லாமல் அவனின் தலைமுடி சுமாராக நரைத்திருந்தது. நாற்பத்தைந்தைத் தாண்டி விட்டவர்களல்லவா! நரைக்காமல் என்ன செய்யும். பாலசுந்தரம், மாயனூரில் என்னுடன் ஒண்ணாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புவரை படித்தான். மிகச் சரியாக பதினெட்டு வருடங்கள் கழித்து இருவரும் சந்திக்கிறோம். சந்தித்த உடனே “வாடா... காபி சாப்பிடுவோம்”என்றான் பாலசுந்தரம். எனக்கு பயங்கர ஆச்சரியம். சின்ன வயதில் எனக்கு காபியைப் பழக்கியவன் அவன்தான். அப்போதே அடிக்கடி கடைக்குக் கூட்டிப் போய் காபி வாங்கிக் கொடுப்பான். மின்வாரியத்தில் வேலை பார்க்கும் அவன் அப்பாவிடம் இதற்காகவே தனியாகக் காசு வாங்கி வைத்துக் கொள்வான்.

மாயனூர் மின்வாரியத்தில்தான் பாலசுந்தரத்தின் அப்பா அதிக வருடங்கள் இருந்தார். அதன் பின்னர் முசிறி, லால்குடி, மண்ணச்ச நல்லூர் கடைசியாக தஞ்சாவூர். ஆனால், பாலசுந்தரத்தை இத்தனை வருடங்கள் கழித்துப் பார்ப்பேன் என நினைத்திருக்கவில்லை. காபி குடித்துக்கொண்டிருக்கும்போதே கேட்டான். “கமலம் டீச்சரைப் பாத்தியா? நல்லாருக்காங்களா?”. பரவாயில்லை. இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறான். ஒண்ணாம் வகுப்பு படித்த நினைவுகளை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது.

நாங்கள் படித்தது நடுநிலைப்பள்ளியாக இருந்தாலும், ஒண்ணாம் வகுப்பும் இரண்டாம் வகுப்பும் பள்ளிக்கூடத்திற்கு வெளியே இன்னொரு தெருவில் ஒரு வாடகைக் கட்டிடத்தில் இருந்தது. பெரிய பள்ளிக்கூடத்தில் தினமும் பிரேயர் முடிந்ததும் வரிசையாகக் கிளம்பி சின்னப் பள்ளிக்கூடம் போவோம். எனக்கும் பாலசுந்தரத்திற்கும் ஒரு போட்டியே நடக்கும். யார் வேகமாகப் போய் கமலம் டீச்சரின் பிரம்பை எடுத்து போர்டில் எழுதிப் போடப்பட்டிருக்கும் ‘அ,ஆ…க.கா...’ வரிசைகளைச் சொல்வது என்பதுதான் அது. அதிகமுறை அவன்தான் கைப்பற்றி விடுவான். கமலம் டீச்சர் எங்கள் இரண்டுபேர் மீதும் பிரியமாக இருப்பார்.பக்கத்தில் இரண்டாம் வகுப்பு பாக்கியம் டீச்சருக்கு தினமும் நானும், பாலசுந்தரமும் வணக்கம் வைப்போம். அதனால் அவரும் பிரியமாக இருப்பார். எங்கள் இரண்டு பேருக்கும் முக்கியமான நண்பர்களாக கைசூப்பி, செந்தில், சோமு எல்லோரும் அறிமுகமானதும் ஒண்ணாம் வகுப்பில்தான். வறுத்த அரிசி, வெல்லக் கட்டி, நவாப்பழம் என நான் கொடுப்பதையெல்லாம் அதிசயித்துப் பார்ப்பான். ஒண்ணாம் வகுப்பில் தரையில் போடப்பட்டிருக்கும் பெஞ்சில் உட்கார்ந்திருப்போம். மண்தரை என்பதால் எந்நேரமும் புழுதி வாசம் அடிக்கும். அதை மிகவும் ரசிப்பான். வருடக் கடைசியில் போட்டோ எடுக்கும்போது, கமலம் டீச்சர் தன்னுடைய வாட்ச்சை எனக்குக் கட்டி விட்டார். பாலசுந்தரம் அவனுடைய அப்பாவின் செயின் போட்ட வாட்ச்சுடன் வந்தான்.

இரண்டாம் வகுப்பு பாக்கியம் டீச்சர் திடீரென ஒரு மாதத்திற்கும் மேலாக வரவில்லை. அவர்களுக்குப் பதிலாக ‘ரூல்தடி’ பொன்னப்பன் சார் வந்தார். லீவு முடிந்துவந்த பாக்கியம் டீச்சரைக் கட்டிப் பிடித்து அழுதார் கமலம் டீச்சர். பாக்கியம் டீச்சரின் கணவர் இறந்துவிட்டதால், வெள்ளைப் புடவையில் இருந்தார். அப்போது, பாலசுந்தரம் வருத்தமாக என் காதில் ‘‘ஏண்டா! நம்ம கமலம் டீச்சருக்கு இன்னும் கல்யாணமே ஆகல?’’ எனக் கேட்டான். பாலசுந்தரத்தைப் பார்க்க எப்போது வீட்டுக்குப் போனாலும் அவனின் அம்மா காபி கொடுப்பார். மணி அக்கா, சாந்தி அக்கா, வாசு அண்ணன் என எல்லோரும் பிரியமாகப் பேசுவார்கள்.தினமும் டிரவுசர், சட்டையை அயர்ன் பண்ணித்தான் போட்டு வருவான். எங்கள் வீட்டில் அந்த வசதி இல்லை என்பதால், ஒரு சொம்பில் நெருப்பைப் போட்டு சட்டையை மட்டும் தேய்த்துக் கொள்வேன். அதுவும் சுதந்திர தினத்தன்று மட்டும்தான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE