கரு.முத்து
muthu.k@kamadenu.in
“பரந்துபட்ட இந்த உலகத்துல மனுசன் பொழைக்கிறதுக்கு ஆயிரம் வழி இருக்கு. ஆனா, கை கால் நல்லா இருக்கவங்களே உழைக்க சோம்பேறிப்பட்டு அடுத்தவங்க உழைப்புல வாழ நினைக்கிறாங்க. எதுவா இருந்தாலும் போராடி ஜெயிக்கணும் சார்... யாரும் யாரையும் எதிர்பார்த்து வாழக்கூடாது” - தன்னம்பிக்கை கீற்றாய் பேசுகிறார் சித்திரநாதன்.
பட்டுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் இருக்கிறது கொண்டிகுளம். இங்கே பஸ்ஸைவிட்டு இறங்கி, மெக்கானிக் சித்திரநாதன் என்று கேட்டாலே அவரது ‘வீரா மெக்கானிக் ஷாப்’புக்கு அழகாய் வழிகாட்டி விடுகிறார்கள் மக்கள். ரிப்பேருக்கு வந்த டிவி-க்கள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்கள் மலைபோல் குவிந்து கிடக்கும் அந்த ஷாப்புக்குள் சித்திரநாதனைத் தேடினேன். டிவி ஒன்றின் மறைவுக்குள் இருந்தார்.
அந்த டிவியின் உயரம்கூட இல்லை 30 வயதாகும் சித்திரநாதன். மொத்தமே சுமார் இரண்டடி உயரம்தான் இருக்கிறார். இடுப்புக்குக் கீழே கால்கள் வளைந்து போய் ஒரு அடி நீளத்தில் இருக்கின்றன. கைகளும் வளைந்து இடுப்பு வரை நீண்டிருக்கிறது. நடக்க முடியாது; தவழ்ந்துதான் செல்ல முடியும். யாராவது இவரது கையை வேகமாக அழுத்திப் பிடித்தால் எலும்பு நொறுங்கிவிடும். லட்சத்தில் ஒருவருக்கு வரும் எலும்பு வளர்ச்சி குறைபாடு நோய்க்கு ஆளான சித்திரநாதனை அவரது அண்ணன் சாமிநாதன்தான் இப்போது கவனித்துக்கொள்கிறார்.