ஸ்மைல் ப்ளீஸ், மிஸ்டர் கருந்துளை!

By காமதேனு

ஆசை
asaithambi.d@kamadenu.in

ஒருவர் எதையோ கண்டுவிட்டு அளவுக்கதிகமாக உற்சாகமாகப் பேசுவதைப் பார்த்து நாம் சொல்வோம், ‘அப்படியே காணாததைக் கண்டதுபோல் குதிக்கிறான்’ என்று. தற்போது உலக அளவில் அறிவியலாளர்களும் அப்படித்தான், காணாததைக் கண்டதுபோல் குதித்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லாம் கருந்துளையின் தரிசனம் கிடைத்ததன் விளைவு.
ஆம்! இதுவரை அறிவியலாளர்களின் ஊகத்திலும் கணினிக் கணக்குகளிலும் அறிவியல் எழுத்தாளர்களின் கற்பனையிலும் மட்டுமே திரிந்துகொண்டிருந்த கருந்துளை முதன்முறையாகப் படமெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை எடுத்தது ‘நிகழ்வெல்லை தொலைநோக்கி’ (Event Horizon Telescope) என்ற வலைப்பின்னலைச் சேர்ந்ததும் அண்டார்க்ட்டிகா, சிலி, ஸ்பெயின் போன்ற எட்டு இடங்களில் உள்ளதுமான மின்காந்தவியல் தொலைநோக்கிகளாகும். உலகெங்குமுள்ள 200 அறிவியலாளர்கள் இந்தத் திட்டத்துக்குத் தங்கள் பங்களிப்பைச் செய்துள்ளார்கள்.

பூமியிலிருந்து 5.5 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது மெஸ்ஸியே உடுமண்டலம். இதன் மையத்தில் உள்ள மிகப் பெரிய கருந்துளைதான் தற்போது படமெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கருந்துளை நமது சூரியனைப் போல 650 கோடி மடங்கு நிறைகொண்டதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. கருத்தளவில் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாகவும் பெயரளவில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகவும் அறிவியலாளர்கள் நாவிலும் சமீபத்தில் பொதுமக்களின் கற்பனையில் சுற்றிவந்த கருந்துளை முதன்முதலாகத் தற்போது படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. இதில் நம் கற்பனையை மிகவும் கிளரும் விஷயம் என்னவென்றால் நாம் பார்க்கும் படத்தில் இருக்கும் கருந்துளை 5.5 கோடி ஒளியாண்டுகளுக்கு முந்தையது. புரியவில்லையா? மகராசன் கமல் பாணியில் சொல்வதென்றால் ‘அது சின்னப் புள்ளையா இருக்கச் சொல்ல எடுத்தது’. ஏனென்றால், அந்த ஒளியோ மின்காந்த அலையோ நம்மை வந்தடைந்த தருணத்தைதான் நாம் இப்போது படம் என்று பதிவு செய்திருக்கிறோம். அந்த அலைகள் புறப்பட்டு அத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும். ஆகவே, நாம் பதிவு செய்திருப்பது புறப்பட்ட தருணத்தில் அந்தக் கருந்துளை எப்படி இருந்ததோ அதைத்தான். இதற்கிடையில் அந்தக் கருந்துளை மெஸ்ஸியே 87-ஐ கபளீகரம்கூட செய்திருக்கலாம். தற்போது அந்தக் கருந்துளை எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள இன்னும் 5.5 கோடி ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்! 

கருந்துளை என்பது என்னவென்று தெரிந்தால்தான் அறிவியலாளர்கள் ஏன் இவ்வளவு உற்சாகமடைந்திருக்கிறார்கள் என்பது நமக்குப் புரியும். மிக மிகப் பெரிய நிறையைக்கொண்ட பொருளொன்று மிகக் குறுகிய இடத்துக்குள் போய் திணிந்துகொள்ளும் என்றால், அந்தப் பொருளைச் சுற்றியுள்ள இடமும் காலமும் வளைக்கப்படும். எடுத்துக்காட்டாக, பூமியானது கருந்துளையாக மாற வேண்டுமானால் அதை ஒரு கோலிக்குண்டு அளவில் சுருக்க வேண்டும். சூரியன் ஒரு கருந்துளையாக மாறும் என்றால், அது வெறும் 6 கி.மீ. குறுக்களவு கொண்டதாக மாறும். ஆனால், உண்மை என்னவென்றால் பூமியாலோ சூரியனாலோ கருந்துளையாக மாற முடியாது. நம் சூரியனை விட 20 மடங்குக்கும் மேலே நிறை கொண்ட விண்மீனால்தான் கருந்துளையாக மாற முடியும்.

கருந்துளையாக மாறுதல் என்பது எம்.ஜி.ஆர். தன் கன்னத்தில் மச்சம் ஒட்டிக்கொண்டு மாறுவேடம் போட்டுக்கொண்டு வருவதுபோல் அல்ல. நம் சூரியனை விட அதிகமாக நிறை கொண்ட விண்மீனொன்று தன் ஆயுளின் முடிவில், அதாவது அதுவரை அதற்கு சக்தி அளித்துக்கொண்டிருந்த எரிபொருள் தீர்ந்துபோகும்போது, அந்த விண்மீன் தனக்குள்ளே மிகமிக வேகமாகச் சுருங்கிக்கொள்கிறது. டைட்டானிக் கப்பல் அதே நிறையுடன் குழந்தைகள் விளையாடும் பொம்மைக் கப்பலாக ஆனால் எப்படி இருக்கும், அதுதான் கருந்துளை. கருந்துளையை ஒரு தேக்கரண்டி நம்மால் எடுக்க முடிந்தால் அதன் எடை கோடி கோடி கிலோவுக்கும் மேல் இருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE