பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை உயர்த்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சந்தனப் பள்ளியில் உள்ள ஏரிக்கு கடந்த 5-ம்தேதி இரவு மக்னா யானை வந்தது. அப்பகுதியில் தாழ்வாகச் சென்ற மின்கம்பியின் மீது யானையின் உடல் உரசியதில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே யானை உயிரிழந்தது.
இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள மின்பாதையில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தவும், ஒரு சில இடங்களில் மின்கம்பிகளில் பிளாஸ்டிக் குழாய்களை பொருத்தவும் வனத்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் திட்டமிட்டனர். இதன் ஒரு பகுதியாக நேற்று பொள்ளாச்சி வனச்சரகத்தில் புளியங்கண்டி பகுதியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள மின்பாதையில் மின்கம்பிகளை மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் சோலையாறு, மானாம்பள்ளி, காடாம்பாறை, நவமலை, ஆழியாறு, சர்க்கார்பதி உள்ளிட்ட இடங்களில் மின்வாரியத்தின் நீர்மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. அங்கு உற்பத்தி செய்யப் படும் மின்சாரம் உயர்மின் கோபுரங்கள் வழியாக மின்நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதேபோல் வனப்பகுதியில் உள்ள டாப்சிலிப், சர்க்கார்பதி, சோலையாறு மற்றும் வன கிராமங்களுக்கு உயர் அழுத்த மின்பாதைகள், தாழ்வு அழுத்த மின்பாதைகள் செல்கின்றன.
வனப்பகுதியில் இதற்கான மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. வன விலங்குகளின் பாதுகாப்பு கருதி, வனப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், வலுவிழந்த மின்கம்பங்கள், சேதமடைந்த மின்கம்பங்கள், சுற்றுவேலி இல்லாத மின்மாற்றிகள் குறித்து மின் வாரியம் மற்றும் வனத்துறை இணைந்து,ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஒவ்வொரு வனச்சுற்றுப் பகுதியிலும் கடந்த ஓராண்டாக ஆய்வு நடத்தி வருகிறது.
குறிப்பாக வனப்பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் மற்றும்யானைகள் செல்லும் பாதையில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை உடனடியாக உயர்த்தவும், வனப்பகுதியில் உள்ள மின்மாற்றிகளை வனவிலங்குகள் நெருங்க முடியாத விதமாக சுற்றுவேலி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆய்வுப் பணிகள் முடிந்ததும், அரசு உத்தரவு பெற்று விரைவில் பணிகள் தொடங்கும், என்றனர்.