இரா.சாரதி
சென்னை மாநகரின் பழம்பெரும் அடையாளமான சென்ட்ரல் இரயில்வே நிலையம் வழக்கம் போல் மும்முரமாக முழுமூச்சுடன் செயல்பட்டுக்கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை ஆறுமணி என்றாலும் எள்ளளவு வெற்றிடமில்லாமல் ஏராளமானோர் கூடுமிடமாகக் காட்சியளித்தது.
இரயிலிலிருந்து ராகோத்தமனும் அவரது மகளும் வந்திறங்கினர். அவர் பலமுறை சென்னைக்கு வந்து போனதால் தயக்கமின்றி அச்சமின்றி பாதச்சுவடுகள் படிய நடந்தார். அவரது மகள் சென்னைக்குப் புதியவள். சென்னை வேளச்சேரியிலுள்ள தனது அண்ணன் மகள் வீட்டின் விசேஷத்துக்காக விடியற்காலையில் வந்துள்ளார்.
“சித்தப்பா, நாளைக்கு கால் டாக்சி ஸ்டிரைக். அதனாலே ஆட்டோ பிடிச்சு வந்துடுங்க. முந்நூறு மேல கொடுக்காதீங்க. ஸ்டேஷன் வெளியே வந்து எதாவது பாசிங் ஆட்டோவைப் பிடிங்க. அப்பதான் கம்மி ரூபாய்க்கு ஆட்டோ கிடைக்கும்” என அண்ணன் மகள் கூறியதை நினைத்தவாறு நடந்தார். ஸ்டேஷன் வாயிலில் மூச்சுவிட ஒரு வினாடி நின்றால்கூட ஆட்டோ ஓட்டுநர்கள் திணறடித்து விடுவார்கள் என்பதால் வேகமாக மகளோடு நழுவினார். ஒரு வழியாக ஆட்டோ ஓட்டுநர்களிடமிருந்து ஓட்டமெடுத்து ஓரம் வந்து சாலையைக் குடைந்து ‘எலி’களாக எளிதாக ‘சப்வே’ வழியாக எதிர்புறம் வந்தனர்.பாதாளப் படிகளில் ஏறியதால் மூச்சிரைத்தது. ஆசுவாசப்படுத்துவதற்காக பெரிய ஆஸ்பத்திரி வாயிலில் சில வினாடிகள் இளைப்பாறினர். பின்பு நிதானமாகக் கூறினார்.