அந்தப் பெண்களுக்கு இந்தச் சமூகம் உறுதி கொடுக்குமா?

By காமதேனு

உ.சந்தானலெட்சுமி

பசுவுக்குப் பாதுகாப்புத் தரும் நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதையே பொள்ளாச்சி சம்பவங்கள் நமக்குச் சொல்கின்றன. “அடிக்காதீங்க அண்ணா...” என்ற அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் உலுக்கிப் போட்டிருக்கிறது. டெல்லியில் நிர்பயாவுக்கு நிகழ்ந்த கொடுமையைப் போன்றே இந்தக் குரூரமும் அரங்கேறியுள்ளது. மாநில மகளிர் ஆணையமும் தேசிய மகளிர் ஆணையமும் இந்த வழக்கில் சிறப்பு கவனம் செலுத்த அரசுக்கு அழுத்தம் தந்திருக்கிறது. முதல் கட்டமாக கைது செய்யப்பட்டுள்ள அந்த நால்வருக்கும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை எழுப்பி வரும் நிலையில், சமூக செயற்பாட்டாளர்களாகவும் சிந்திக்கும் திரைத்துறை பெண்கள் சிலர் இது குறித்து தங்களது ஆதங்கத்தைப் பதிவு செய்தார்கள்.

ரோகிணி (நடிகர் - சமூக செயற்பாட்டாளர்)

இந்தச் சமூக கட்டமைப்பே பெண்களைக் குறை சொல்லுது. அதாவது, கற்பு என்ற ஒன்றை மட்டுமே வைத்துக்கொண்டு பெண்களைப் பாதிக்கும் பிரச்சினைகளை அணுகுது. ஏனெனில், இந்தச் சமூகம் பெண்ணின் உடல்தான் இதெற்கெல்லாம் காரணம் என்கிறது. முதலில் இந்தப் பார்வையை மாத்தணும். ஆண்களின் வக்கிரத்தால்தான் இந்தச் சம்பவமே நடந்திருக்கு. இத்தனை நாள் இது நடந்தும் ஏன் பெண்கள் இதை வெளியில் சொல்லலைன்னா... நம்மையும் நம் குடும்பத்தையும் தப்பா பேசுவாங்களே என்ற பயம்தான் அதற்குக் காரணம். இந்தச் சம்பவத்தை வைத்துப் பெண்களை எந்த வகையிலும் தாக்க மாட்டோம் என்ற உறுதியை இந்தச் சமூகம் கொடுக்குமா? இப்பவே பாருங்க... பொள்ளாச்சியில் பெண் எடுக்க மாட்டோம்னு ஒருசில அறிவிலிகள் பேசுறாங்க. ஒரு குடும்பமோ, சமூகமோ, ‘பாதிக்கப்பட்ட பெண்களுக்காக  நாங்கள் இருக்கிறோம் தைரியமா வெளியில்  வாங்க’னு பேசணும். பெண் குழந்தைகளை வளர்க்கிறதப் பத்தி பேசுறோம். என்னைக்காவது, ஆண்பிள்ளைகளைப் பத்தி பேசுறோமா? ஊரச் சுத்திட்டு வர்றவன்கிட்டயும் கேள்வி கேளுங்க. பாலின சமத்துவத்தை முதலில் வீட்ல ஆரம்பிங்க. அப்பா, அம்மாவை அடிச்சா மகனும் நாளைக்கு வளர்ந்து பொண்ணுங்கள அடிக்கப் பழகுறான். பெண் பிள்ளைகள் வளரும் தருணத்தில் இதுபோன்ற குரூரங்கள் அவங்களோட சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் பயமுறுத்துது. பொள்ளாச்சி விஷயத்தில் மக்கள் கொதிச்சுப்போய் இருக்காங்க. நிச்சயமா நாம எல்லாருமே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உறுதுணையா இருக்கோம். அந்தக் கயவர்களுக்கு உடனடியா தண்டனை கிடைக்கணும். அப்பதான் இனிமே ஒரு தப்பு செய்ய யாருக்கும் பயம் வரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE